வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (09:21 IST)

வருமான வரித்துறையை ரத்து செய்வோம் – விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை !

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வருமான வரித்துறையினை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்துவோம் எனக் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து எதிர்கொள்கிறது. அந்தக் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரும் சிதம்பரம் தொகுதியில் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதில் வருமான வரித்துறை குறித்து முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ‘மத்திய அரசு வரிவிதிப்புத் திட்டங்களில் பெரும்பாலும் மக்களை அச்சுறுத்தும் அலைக்கழிக்கும் துறை வருமான வரித் துறை ஆகும். இந்த வருமான வரித் துறையினால் அரசுக்கு வருகின்ற வருமானம் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே. இந்த 6 சதவிகித வருமானம் பெரும்பாலும் வருமான வரித் துறை அலுவலகப் பணிக்காகவும் சம்பளத்துக்காகவும் செலவிடப்படுகிறது. எனவே, இந்த வரிவிதிப்பு அமைப்பினால் பெரும் பொருளாதாரப் பயன் ஏதும் நிலவவில்லை. மாறாக தனிநபர் ஊழல்களுக்கு மட்டுமே அது வழி வகுத்துள்ளது. அதனால், வருமான வரித் துறையில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்ற அதே நேரத்தில், வருமான வரித் துறையை முழுமையாக ரத்து செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்தரும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்’ என தெரிவித்துள்ளது.

தேர்தக் நேரத்தில் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு வருமான வரித்துறையைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.