சைபர் கிரைம் அதிகரிப்பு: கடந்த 5 மாதங்களில் 3,286 இந்திய இணையதளங்கள் முடக்கம்

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 3 டிசம்பர் 2009 (17:50 IST)
இந்திய இணையதளங்களை முடக்கும் (hack) சதிச் செயல் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2009 ஜனவரி முதல் ஜூன் வரையிலான 5 மாதங்களில் மட்டும் 3,286 இந்திய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் CERT-In (Indian Computer Emergency Response Team) என்ற பிரிவு இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மெக்கஃபீ (McAfee) இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஸ்ரீதர் ஜெயந்தி கூறுகையில், “இந்திய அரசின் முக்கிய இணையதளமான தேசிய தகவல் மையத்தையும் முடக்க சதி நடத்திருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இதனை சீனாவைச் சேர்ந்த கோஸ்ட்நெட் (GhostNet) என்ற சைபர் கிரைம் குழு முடக்க சதி செய்தது.
கடந்த 2008இல் மட்டும் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய இணையதளங்கள் முடக்கப்பட்டன. இதில் 100 இணையதளங்கள் இந்திய அரசுக்கு உரியவை.

கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான easternrailway.gov.in சமீபத்தில் முடக்கப்பட்டது. இதேபோல் இந்தியன் வங்கியின் இணையதளத்தையும் முடக்க சைபர் கிரைம் திருடர்கள் சமீபத்தில் முயற்சி மேற்கொண்டனர்.
இதுபோன்று அரசு தளங்களை முடக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத் தடுக்க முதற்கட்டமாக மத்திய அரசின் சார்பில் தேசிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

எனினும், அரசு இணையதளங்களை விட தனியாருக்கு சொந்தமான இணையதளங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தகவல் திருட்டு மற்றும் இணையதள முடக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் தனியார் நிறுவனங்களின் கட்டமைப்பு பெரும்பாலும் இணையதளத்தை நம்பியே உள்ளது என ஜெயந்தி தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :