1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (09:22 IST)

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி

நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 10 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு தாமதமாக தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணி தங்கள் இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான கம்பீர் 12 ரன்னிலும், உத்தப்பா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரஸல் பெங்களூர் அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். எனினும் அவர் 45 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் கொல்கத்தா அணி 111 ரன்களை சேகரித்தது.
 
இதைத்தொடர்ந்து பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்ல் மற்றும் கோலி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். சிறப்பாக செயல்பட்ட இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். எனினும் அதிரடி மன்னன் கெய்ல் 21 ரன்னிலும், கேப்டன் கோலி 34 ரன்னிலும் வெளியேறினர். பின் வந்த டிவில்லியர்ஸ் வெறும் 2 ரன்னில் ஏமாற்றினார். பின்னர் இறுதி ஓவரில் பெங்களூர் அணிக்கு 13 ரன் தேவைபட்ட போது மன்தீப்சிங் சிக்சர் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.