வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (08:37 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: 20 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின்  23 ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2 ஆவது வெற்றியை பெற்றது.


 

 
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த தொடரின் 23 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், ஹைதராபாத் சன் ரைசர்சும் மோதின. 
 
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான லென்டில் சிமோன்சும், பார்த்தீவ் பட்டேலும் நல்ல தொடக்கம் (5.4 ஓவரில் 42 ரன்) ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
பட்டேல் 17 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி) ஸ்டெயின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய உன்முக் சந்த் 5 ரன்னில் கேட்ச் ஆனார்.
 
இந்நிலையில், சிமோன்ஸ் நிலைத்து நின்று ஆடினார். 12.2 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை தொட்டது. சிமோன்ஸ் (51 ரன், 42 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டெயின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 
 
 
இதைத் தொடர்ந்து, 158 ரன்கள் இலக்கை விரட்டி பிடிக்கும் உத்வேகத்துடன் டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 5 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்த நிலையில், டேவிட் வார்னர் (9 ரன்) மலிங்காவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
 
அடுத்த ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் மெக்லெனஹான், தவானின் (42 ரன், 29 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
இந்நிலையில், கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. 19 ஆவது ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரில் மட்டும் ஹைதராபாத்தின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு துணைபுரிந்தார்.
 
இதனால், 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர் மலிங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.