1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (11:41 IST)

ஐபிஎல்: மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றய ஆட்டத்தில், டுமினி, அய்யர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தாலும், இம்ரான் தஹிரின் அபார பந்து வீச்சாலும் மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 


 

 
ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றய ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. அதில், டெல்லி - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.
 
அதன்படி, முதலில் பெட்டிங் செய்த டெல்லி அணி டுமினி (78 அவுட் இல்லை), அய்யர் (83) அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
 
இதைத் தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல் களம் இறங்கினார்கள். சிம்மன்ஸ் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து உன்முக் சந்த் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். 6 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த பட்டேல் அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார்.
 
பின்னர் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். உன்முக் சந்த் 9 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 11 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். அடுத்து பொல்லார்டு களம் இறங்கினார். இவர் 10 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
 
இந்நிலையில், அம்பதி ராயுடு களம் இறங்கினார். ரோகித் சர்மா 24 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும், அம்பதி ராயுடு 22 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினார்கள். அத்துடன் மும்பை அணியின் தோல்வி உறுதியானது.
 
இதனால், 20 ஓவர் முடிவில் மும்பை அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.