வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : புதன், 6 மே 2015 (12:43 IST)

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பரபரப்பு வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 39 ஆவது லீக்கில் டெல்லிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி கடைசி ஓவரில் பரபரப்பானமுறையில் வெற்றி பெற்றது.


 

 
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த தொடரின் 39 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. 
 
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியை சந்தித்தது. மலிங்கா வீசிய பந்தில் மயங்க் அகர்வால் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து, வெளியேறினார்.
 
பின்னர் களம் இறங்கிய கேப்டன் டுமினி அதிரடி காட்டினார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களிலும், டுமினி 28 ரன்னிலும் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால், டெல்லி அணியின் ரன் சரிவுக்குள்ளானது. அந்த அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்களே எடுத்திருந்தது.
 
இதைத் தொடர்ந்து, களம் புகுந்த யுவராஜ் சிங்கும் ஆரம்பத்தில் தடுமாறினார். அவர் எதிர்கொண்ட முதல் 31 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு வேகத்தை அதிகரித்தார்.
 
பின்னர் மெக்லெனஹானின் ஓவரில் சிறப்பாக 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நடப்பு சீசனில் யுவராஜ் சிங் 2 ஆவது அரைசதத்தை கடந்தார்.
 
19 ஆவது ஓவரில் மலிங்கா வீசிய பந்தை அடித்தபோது, பந்து லென்டில் சிமோன்ஸ்சிடம் கேட்ச் ஆனது. இதனால், யுவராஜ் சிங் 57 ரன்களில் ஆட்டமிழந்தார் (44 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்). கேதர் ஜாதவ் 16 ரன்னிலும், மேத்யூஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. சவுரப் திவாரியும் (13 ரன்), கவுல்டர்-நிலேவும் (3 ரன்) களத்தில் நின்றனர்.
 
இதைத் தொடர்ந்து, 153 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. ஜாகீர்கான் வீசிய முதல் ஓவரிலேயே சிமோன்ஸ் (0) எல்.பி.டபிள்யூ ஆனார். தொடர்ந்து ஹர்டிக் பான்ட்யா (5 ), பார்த்தீவ் பட்டேல் (13), ஹர்பஜன்சிங் (5) வரிசையாக வெளியேறினர்.
 
இதனால் அந்த அணி 40 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, மழை வந்ததால் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் ஓவர் குறைக்கப்படவில்லை.
 
இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும், அம்பத்தி ராயுடுவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடனர்.
 
கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களில் (37 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து பொல்லார்ட், களம் இறங்கினார். இதனால், மும்பை அணிக்கு நம்பிக்கை பிறந்தது.
 
இந்நிலையில், கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது, 19 ஆவது ஓவரில் பொல்லார்ட்-ராயுடு ஜோடி 14 ரன்கள் எடுத்தனர்.
 
பின்னர் கடைசி ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் பந்தை வீசினார். இதில் பொல்லார்ட் சிக்சர் அடித்து வெற்றிக்கு துணைபுரிந்தார்.
 
இதன் மூலம், மும்பை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பாக வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு 49 ரன்களுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), பொல்லார்ட் 26 ரன்களுடனும் (14 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
 
10 ஆவது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 5 ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.