வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (09:09 IST)

ஐ.பி.எல். 19 ஆவது லீக்: ஹைதராபாத் அணியிடம் கொல்கத்தா தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.


 

 
விசாகப்பட்டினத்தில் நேற்று மாலை நடந்த 19 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் ரையான் டென்டசாட் நீக்கப்பட்டு ஜோகன் போத்தா சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் இயான் மோர்கனுக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் இடம் பிடித்தார். காயம் காரணமாக விலகிய லட்சுமி சுக்லாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட பிபுல் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. டிரென்பவுல்ட் ஓரங்கட்டப்பட்டு ஸ்டெயின் மீண்டும் களம் கண்டார். 
 
‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். 2 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தில் அணியின் முதல் பவுண்டரியை விரட்டிய டேவிட் வார்னர் தொடர்ந்து அதிரடி காட்டினார். 
 
ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். 11.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி 100 ரன்களை தாண்டியது. வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்ட டேவிட் வார்னர் 55 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 91 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருந்தது.
 
இதைத் தொடர்ந்து, களம் கண்ட ரவிபோபரா 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் (46 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) 54 ரன்கள் எடுத்த நிலையில் 19 ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். நமன் ஓஜா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 7 ரன்னுடனும். லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மோர்னே மோர்கல் 2 விக்கெட்டும், உமேஷ்யாதவ், ஆந்த்ரே ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 
 
ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸ் முடிந்ததும் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. எனவே டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 12 ஓவர்களில் 118 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
 
118 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் 8 பந்தில் 4 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதிரடியா விளையாடிய ராபின் உத்தப்பா 21 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரஸ்செல் (19 ரன்), யூசுப் பதான் (6 ரன்) ஆகியோர் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்ததால் கொல்கத்தா அணியால் வெற்றி இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை.
 
இறுதிவரை போராடிய மனிஷ்பாண்டே 24 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
91 ரன்கள் அடித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.