வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (08:55 IST)

ஐ.பி.எல் 11 ஆவது லீக்: கடைசி பந்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டியின் 11 ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.



 

 
8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 11 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு விசாகப்பட்டினத்தில் நந்தது. இதில் ஹைதராபாத் சன் ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக கனே வில்லியம்சனுக்கு பதிலாக மோர்கன் சேர்க்கப்பட்டார். 
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஹைதராபாத் அணியின் இன்னிங்சை தொடங்கினர். கிறிஸ் மோரிசின் ஒரே ஓவரில் வார்னர் மூன்று பவுண்டரிகளை விளாசினார்.
 
ஆனால் இந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்த நிலையில், இந்த கூட்டணிக்கு தவால் குல்கர்னி முற்றுப்புள்ளி வைத்தார். அவரது பந்து வீச்சில் தவான் 10 ரன்களில் (12 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் (21 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து இறங்கிய லோகேஷ் ராகுலும் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
 
இதன் பிறகு கைவசம் விக்கெட்டுகள் இருந்தாலும் ஹைதராபாத் அணி திணறியது. ராஜஸ்தான் பவுலர்கள் பந்து வீச்சில் அமர்க்களப்படுத்தினர். குறிப்பாக 43 வயதான சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே பந்து வீச்சில் மிரட்டினார்.
 
இதைத் தொடர்ந்து, 20 ஓவர்களில் ஹைதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மோர்கன் 27 ரன்களும், நமன் ஓஜா 25 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் தவால் குல்கர்னி, பிரவீன் தாம்பே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இந்நிலையில், 128 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் (10.2 ஓவர்) எடுத்தனர். சாம்சன் 26 ரன்களில் (30 பந்து, 2பவுண்டரி) கேட்ச் ஆனார்.
 
இதையடுத்து வந்த பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் சுமித் (13 ரன்), கருண் நாயர் (1 ரன்) ஏமாற்றினர். 14–வது அரைசதத்தை கடந்த ரஹானே 62 ரன்களில் (56 பந்து, 9 பவுண்டரி) டிரென்ட் பவுல்டின் பந்து வீச்சில் போல்டு ஆனார். சிறிய இலக்கு என்றாலும் ஆச்சரியப்படும் வகையில் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாகக் கையாண்டனர்.
 
கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டூவர்ட் பின்னியும், ஜேம்ஸ் பவுல்க்னெரும் களத்தில் நின்றனர். 20 ஆவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் வீசினார். முதல் 5 பந்துகளில் அவர் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் பரபரப்பு அதிகமானது.
 
கடைசி பந்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. ஹைதராபாத் கேப்டன் வார்னர் பீல்டிங்கை அரண் போல் சுற்றி நெருக்கமாக அமைத்தார். ஆனால் கடைசி பந்தை பிரவீன்குமார் யார்க்கராக வீச முயற்சித்த போது, அதை எதிர்கொண்ட பவுல்க்னெர் பந்தை பவுண்டரிக்கு அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இதன் மூலம் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.