வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2015 (09:23 IST)

ஐ.பி.எல் 10 ஆவது லீக்: தொடர் தோல்வியை முடிவுக்குக் கொண்டுவந்தது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டியின் 10 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. இதில் டெல்லி அணி தனது முதலாவது வெற்றியை பதிவுசெய்தது.



 

 
8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறன. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
 
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் புனே நகரில் நேற்றிரவு நடந்த தொடரின் 10 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. பஞ்சாப் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் ஜெய்தேவ் உனட்கட்டுக்கு பதிலாக டொமினிக் ஜோசப் சேர்க்கப்பட்டார்.
 
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷேவாக்கும், தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜயும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்த இந்த ஜோடி 5 ஆவது ஓவரில், விஜய் 19 ரன்களில் (18 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.
 
இதையடுத்து ஷேவாக்குடன், விருத்திமான் சஹா இணைந்தார். இருவரும் முடிந்த வரை பேட்டை வேகமாக சுழட்டினர். இம்ரான் தாஹிரின் ஒரே ஓவரில் ஷேவாக் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் விளாசினார். 13 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை தொட்டது. இதனால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
 
ஆனால் சஹா 39 ரன்களிலும் (28 பந்து, 3 சிக்சர்), ஷேவாக் 47 ரன்களிலும் (41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். மேக்ஸ்வெல் (15 ரன், 5 பந்து) இம்ரான் தாஹிரின் ஒரே ஓவரில் 2 சிக்சர் அடித்ததுடன் அதே ஓவரில் விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 5 ரன்னிலும், கேப்டன் ஜார்ஜ் பெய்லி 19 ரன்னிலும், அக்ஷர் பட்டேல் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
 
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. தனது முதல் இரு ஓவர்களில் 34 ரன்களை வாரி வழங்கிய டெல்லி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் அவர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டுமினி 2 விக்கெட்டுகளும், மேத்யூஸ், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
பின்னர் களமிரங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 166 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. ஸ்ரீயாஸ் அய்யர் 5 ரன்னிலும், கேப்டன் டுமினி 21 ரன்னிலும் வெளியேறினாலும் மயங்க் அகர்வாலும், யுவராஜ்சிங்கும் டெல்லி அணிக்கு பலம் சேர்த்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவராஜ் சிங் அக்ஷர் பட்டேலின் ஓவரில் 2 சிக்சர்கனை அடித்தார். அகர்வாலும் பஞ்சாப் பவுலர்களை அடித்து விலாசினார்.
 
வெற்றியை நெருங்கிய தருவாயில் யுவராஜ்சிங் (55 ரன், 39 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மயங்க் அகர்வால் (68 ரன், 48 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேதர் ஜாதவ் 3 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர் மேத்யூஸ் (6 ரன், நாட்–அவுட்) பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார்.
 
டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது முதல் இரு ஆட்டங்களில் சென்னை மற்றும் ராஜஸ்தானிடம் தோற்றிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். 3 ஆவது லீக்கில் ஆடிய பஞ்சாப்புக்கு 2 ஆவது தோல்வியாகும்.
 
இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் தோற்றிருந்த டெல்லி அணி இந்த சீசனிலும் முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்திருந்தது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்த டெல்லி அணி தனது முதல் வெற்றியைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.