வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (20:33 IST)

ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
8ஆவது ஐ.பி.எல் போட்டியின் லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி டேர் டேவில்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் அகர்வால் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜே.பி. டுமினியும், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடினர். ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் [3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 50 ரன்கள் குவித்தார்.
 
அதனைத் தொடர்ந்து டுமினியும் 39 பந்துகளில் [5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] அரைச்சதத்தை கடந்தார். இதனால் அந்த அணி 13 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 60 ரன்களிலும், டுமினி 54 ரன்களில் வெளியேறினர்.
 

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 9 ரன்களில் வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் டேல் ஸ்டெய்ன், பிரவீன் குமார் புவனேஷ்குமார், ரெட்டி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், டேவிட் வார்னரும் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினர். இதனால் 6 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது.
 
ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷிகர் தவான் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலேயே வார்னரும் வெளியேறினார். அவர் 20 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ரவி போபராவும், லோகேஷ் ராகுலும் டெல்லி அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
 

 
பின்னர் ராகுலும் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். போவராவும் 41 ரன்கள் குவித்து வெளியேறினார். விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தது. பரபரப்பான நிலையில் கடைசி ஓவருக்கு ஹைதராபாத் அணிக்கு 10 ரன்கல் தேவைப்பட்டது.
 
அப்போது களத்தில் ஆஷிஷ் ரெட்டியும், கரன் சர்மாவும் இருந்தனர். நைல் பந்து வீசினார். முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரெட்டி வெளியேறினார். 3 மற்றும் 4ஆவது பந்தில் தலா 1 ரன் எடுக்கப்பட்டது.
 
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தை கரன் சர்மா சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லைக் கோட்டிற்கு அருகில் நின்ற அகர்வால் அபாரமாக தடுத்தார். 2 ரன்கள் எடுக்கப்பட்டது.
 
கடைசி பந்தில் 5 தேவை என்ற நிலையில் கரன் சர்மா கேட்ச் ஆனார். இதன் மூலம் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் டுமினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக டுமினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.