1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. தலங்கள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 5 மே 2016 (11:03 IST)

திருவாலங்காடு தல வரலாறு

திருவாலங்காடு தல வரலாறு

இறைவன்: ஊர்த்த தாண்டவர்
இறைவி: வண்டார் குழலியம்மை
 
இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சென்னை அரக்கோணம் ரயில் பாதையில், திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்காக மூன்று மைல் தொலைவில் உள்ளது.
 
மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.


 
 
இத்தலத்திற்கு பழையனூர், ஆலங்காடு என்ற பெயரும் உண்டு, இத்தலம் இரத்தின சபைக்குரியது. திருவாலங்காட்டைப் பற்றி பாட மறந்ததை இறைவன் நினைவூட்டியதால் ஞானசம்பந்தர் இறைவனை உணர்த்திப் பதிகம் பாடினார். தொண்டை மண்டல சதகத்தில் ஆலங்காட்டு நீலியின் நிமித்தம் ஒரு வணிகனுக்கு வாக்களித்தபடி ஏரியில் எழுபது வேளாலர்கள் நீரில் மூழ்கி உயிர் நீத்ததை தீப்பாய்ந்தார்கள் என்று கூறுகிறது.
 
புனிதவதி என்ற அம்மையார், காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள். நாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும், புனிதவதிக்கும்  திருமணம் நடந்தது. திருமணம் முடுந்ததும் புதுமணத் தம்பதியினறை, தனதத்தனார் தனிக்குடித்தனம் அமர்த்தினார்.
 
பரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். அக்கனிகளை அவர் தன் மனையாளிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார். அவ்வேளையில் அமுது ஆகாததால் மாங்கனிகளுள் ஒன்றை அனுப்பி வைத்தார் அவ்வம்மையார். பின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் படைத்தார். கனி சுவை மிகுந்து காணப்பட்டதால், மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் கேட்டார். செய்வதறியாது திகைத்த அம்மையார் சிவனை வேண்டினார்.
 
இறைவனருளால் இன்னொரு கனியையும் பெற்றாள். கணவன் இக்கனி எப்படி வந்ததென வினவினான். சிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார். அம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன், அப்படியென்றால் சிவனிடம் வேண்டி இன்னொரு கனி பெற்றித் தருமாறு கேட்க, சிவனருளால் மீண்டும் ஒரு கனி தோன்றி மறைந்தது. அம்மையாரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து, அவரிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தார். அதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான். இதனிடையே வணிக நிமித்தம் வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்தான். மறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர். அக்குழந்தைக்கு புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.
 
இதனிடையே புனிதவதியாரின் பெற்றோர்கள், தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் மருமகனின் இருப்பிடம் சென்றடைந்தனர். பரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து வணங்கினார்கள். தன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார், தன் உடலை வருத்தி பேய் உருக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.
 
தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார். பெருமான் புனிதவதியாரை ‘அம்மையே’ என்றழைக்க அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்றழைத்தார். என்னவரம் வேண்டுமென்று வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும் மீண்டும் பிறந்தால் ஐயனை மறவாதமனம் வேண்டுமென்றும், ஐயனின் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினார். 
 
‘அம்மையார் திருவாலங்காட்டில் சென்றமர்க' என்று இறைவன் அருளினார்.
 
அம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார். 
 
காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு முத்தபதிகம் 22-ம், திருவிரட்டை மணிமாலையென 20-ம் அற்புத திருவந்தாதி 101 பாடல்களுமென 143 பாடல்களைப் பாடியுள்ளார்.