1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (15:58 IST)

இனி மேல் படம் தயாரிப்பதில்லை - ஆஸ்கர் வென்றவரின் அச்சம்

நடிகர் மெல் கிப்சன் இனிமேல் பணத்தை தயாரிப்பில் முடக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவரை போதுமடா சாமி என்று சொல்ல வைத்தது ஸ்டுடியோக்களின் ஆதிக்கம்.


 

 
ஹாலிவுட்டில் யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம். ஆனால் அதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான நெட்வொர்க் யூனிவர்சல் பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ், 20 சென்சுரி ஃபாக்ஸ் என சில ஸ்டுடியோக்களின் கைகளில்தான் உள்ளது. 
 
நீங்கள் ஒரு படம் தயாரித்திருக்கிறீர்கள் என்றால் ஸ்டுடியோக்களில் அதற்கென்று நியமித்திருப்பவர்கள் உங்கள் படத்தைப் பார்ப்பார்கள், மதிப்பிடுவார்கள். சிலவேளை காட்சிகளை மாற்றவும் சொல்வார்கள். இந்த வியாபாரத்தில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். 
 
மெல் கிப்சன் அவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த பிரேவ் ஹார்ட், பேஷன் ஆஃப் த கிரைஸ்ட் உள்பட நான்கு படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். நான்கையும் வெளியிட ஸ்டுடியோக்களின் உதவியைதான் நாட வேண்டியிருந்தது. அவர் தயாரித்து இயக்கிய பேஷன் ஆஃப் த கிரைஸ்ட் உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படம் (அது ஏசுவின் வாழ்க்கை வரலாறு என்பதால் அராமிக் மொழியில் எடுக்கப்பட்டது). என்றாலும் மெல் கிப்சனுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் அவரது அபோகலிப்டோ படம். 
 
இந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக இனிமேல் தயாரிப்பே கிடையாது என்று முடிவெடுத்துள்ளார்.
 
சில விஷயங்களில் கோடம்பாக்கத்தைப் போலதான் இருக்கிறது ஹாலிவுட்டும்.