1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By ஸ்ரீ.ஸ்ரீ.
Last Updated : புதன், 6 ஜனவரி 2016 (17:29 IST)

திருப்பாவை பாடல் 21

திருப்பாவை பாடல் 21
 
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


 
 
பொருள் :
 
நப்பின்னை உட்பட எல்லாப் பெண்களும், கண்ணனைப் போற்றிக் துதித்துத் துயில் எழ வேண்டும் பாடல்.
 
நந்த கோபரிடம் ஏராளமான பசுக்கள் உண்டு. அவ்வளவு பசுக்களும், எவ்வளவு பெரிய பாத்திரங்களை வைத்தாலும், அவை எதிரே பொங்கி வழியும் படியாக, இடைவிடாமல் பாலைச் சொரியக் கூடியவை. வள்ளல் தன்மை மிக்க அப்படிப்பட்ட பசுக்களை, விசேஷமாகப் படைத்துள்ள நந்தகோபரின் மகனே! எழுந்திரு.

எளியவர்களைக் காப்பதில் மன எழுச்சி கொண்டவனே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! இந்த உலகத்தில் தோன்றிய தேஜோ மயமானவனே! பகைவர்கள், உன் எதிரில் நிற்க மாட்டாமல், தங்கள் வலிமை ஒழிந்து, வேறு கதியில்லாமல் உன் திருவடிகளில் வந்து விழுந்து பணிவதைப் போல, நாங்களும் உன்னைப் போற்றிப் புகழ்ந்து பல்லாண்டு பாடியபடி வந்து சேர்ந்தோம்.
 
                                                                                                                                                           விளக்கவுரை:  ஸ்ரீ.ஸ்ரீ.