பெரியோர்களிடம் ஆசிப் பெற்று தங்கள் அன்பை பகிரும் காணும் பொங்கல்


Sasikala|
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் (கன்னுப்பொங்கல்) அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். 

 
 
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற்று தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வது போன்றவை நடைப்பெறும். நம் வழித்தோன்றலுக்கும் நம்முடைய பண்பாட்டை தெரிவிப்பதோடு, பெரியோர்களிடம் ஆசி பெறுதல் போன்ற நல்லபழக்கம் மற்றும் கலாச்சாரத்தை தெரிவித்தல் ஆகியவை ஆகும்.
 
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
 
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
 
உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல்.


இதில் மேலும் படிக்கவும் :