வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 25 ஜனவரி 2015 (13:48 IST)

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதுதான் எளிதான வழி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
மருத்துவம் அல்லாத வழிகள் மூலம் பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது குறித்த ஆய்வில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் அதிகம் புழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது, கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது ஆகியவை இந்நோய் பரவுவதைக் குறைக்கும்.
 
குறிப்பாக, தடுப்பு மருந்துகள் கிடைக்காத மற்றும் போதுமான அளவு இல்லாத சூழல்களில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருப்பது நோய்த்தொற்று பரவாமல் இருக்க மிகவும் சிறந்த வழியாகும். பள்ளிகள், கேளிக்கை அரங்குகளுக்கு தற்காலிக விடுமுறை அளிப்பது, பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்வது போன்றவை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறந்த உத்தியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
“மெக்ஸிகோவில் கடந்த 2009 ஏப்ரல் மாதம் பன்றிக் காய்ச்சல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், மக்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்ததன் மூலம் நோய் பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது என, இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் மைக்கேல் ஸ்பிரிங்பார்ன் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலம், பிறருடன் தொடர்பு கொள்ளும் விகிதம் குறைவதால், நோய் பரவுவது தடுக்கப்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.