வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (13:43 IST)

எளிதில் கிடைக்கும் வாழைப்பூவின் அற்புத மருத்துவக் குணங்கள்!!

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து உடலுக்கு நன்மையளிக்கும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது.
சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால்  சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 
மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.
 
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
 
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு  நீங்கும்.
 
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவை சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி  குறையும்.
 
வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
 
கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.
 
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.