1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 21 பிப்ரவரி 2015 (17:09 IST)

தங்க நாணயம் இறக்குமதி: கட்டுப்பாடுகளை நீக்கியது ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி, தங்க நாணயம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
 
மத்திய அரசு, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தங்கம் இறக்குமதி மீது சில கட்டுப்பாடுகளை விதித்தது. 
 
இந்த கட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் தங்க நகை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால், கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் நகை வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 
 
இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் நூறு சதவீத தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரண தங்கமாக தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது.
 
இந்த நடவடிக்கையை, நகை வியாபாரிகள் வரவேற்றனர். இதற்கிடையே, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 
 
இதன் ஒரு பகுதியாக தங்க நாணயம் மற்றும் தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட பதக்கங்களை வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி விலக்கிக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில், வங்கிகள் நேரடியாக வாடிக்கை யாளர்களுக்கு தங்க நாணயம் விற்பதற்கான தடை நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.