வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 2 ஜனவரி 2015 (14:31 IST)

உற்பத்தி குறைவால் மல்லிகை பூ கிலோ ரூ. 1000க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை பூ உற்பத்தி குறைந்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது.


 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சுற்றி 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு இப்பகுதியில் இருந்து 10 டன் மல்லிகை பூ உற்பத்தியாகிறது.
 
இந்த பூக்கள் தமிழ்நாடு விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர் சங்கம் மூலமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் சத்தியமங்கலம் மல்லிகை மும்பாய், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
 
வெய்யில் காலத்தில் மல்லிகை பூ அதிகமாக பூக்கும் ஆனால் குளிர் காலத்தில் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாகப் பாதிக்கும். வெய்யில் காலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 120 கிலோ வரை மல்லிகை பூ விளைச்சல் கொடுக்கும்.
 
ஆனால் குளிர் காலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ மட்டுமே கிடைக்கிறது. இதன் காரணமாக தற்போது மல்லிகை பூ விலை அதிகரித்துள்ளது.
 
விளைச்சல் அதிகம் வரும்போது ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 100 முதல் ரூ. 300 வரை விற்பனையாகும். சில நாட்களில் ஒரு கிலோ ரூ. 5 க்கும் கூட விற்பனையாவதுண்டு.
 
தற்போது குளிர் காலம் என்பதால் மல்லிகை விளைச்சல் வழக்கம்போல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகை உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக தற்போது மல்லிகை பூ கிலோ ஒன்று ரூ. 1000ம் வரை விற்பனையாவது குறிப்பிடதக்கது.