வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 16 ஜூலை 2015 (07:29 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசும், டீசல் விலை 2 ரூபாய் 44 காசும் குறைக்கப்பட்டது.
 
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
 
கடந்த 1 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், நேற்று அவற்றின் விலை மீண்டும் குறைக்கப்பட்டது.
 
உள்ளூர் வரிகளைச் சேர்க்காமல், லிட்டருக்கு தலா 2 ரூபாய் விலை குறைக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
 
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசு குறைக்கப்பட்டன. லிட்டருக்கு ரூ.69.84 ஆக இருந்த பெட்ரோல் விலை, ரூ.67.29 ஆக குறைக்கப்பட்டது.
 
சென்னையில், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 44 காசு குறைக்கப்பட்டது. லிட்டருக்கு ரூ.53.52 ஆக இருந்த டீசல் விலை, ரூ.51.08 ஆக குறைக்கப்பட்டது.
 
டெல்லியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) அம்மாநில அரசு நேற்று உயர்த்தியது.
 
அதனால் அங்கு மட்டும் பெட்ரோல் விலை அதிகரித்தது. அதாவது, ரூ.66.62 ஆக இருந்த பெட்ரோல் விலை, 28 காசு அதிகரிக்கப்பட்டு, ரூ.66.90 ஆனது. டீசல் விலை, ரூ.50.22 ல் இருந்து 50 காசு குறைக்கப்பட்டு ரூ.49.72 ஆனது.
 
மும்பையில், பெட்ரோல் விலை ரூ.74.52 ல் இருந்து ரூ.2.55 குறைந்து ரூ.71.97 ஆனது. டீசல் விலை, ரூ.57.64 ல் இருந்து ரூ.2.49 குறைந்து ரூ.55.15 ஆனது.
 
கொல்கத்தாவில், பெட்ரோல் விலை ரூ.74.09 ல் இருந்து ரூ.2.52 குறைந்து ரூ.71.57 ஆனது. டீசல் விலை, ரூ.54.75 ல் இருந்து 2 ரூபாய் குறைந்து ரூ.52.75 ஆனது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.