வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 16 மே 2015 (07:20 IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றி அமைக்கின்றன.
 
இதன்படி, கடந்த 1 ஆம் தேதி, உள்ளூர் வரிகள் நீங்கலாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 96 காசும், டீசல் விலை 2 ரூபாய் 37 காசும் உயர்த்தப்பட்டது.
 
உள்ளூர் வரியையும் சேர்த்து அப்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 18 காசும், டீசல் விலை 2 ரூபாய் 55 காசும் அதிகரித்தது.
 
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் 13 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 71 காசும் அதிரடியாக உயர்த்தின.
 
இதைத் தொடர்ந்து, உள்ளூர் வரியையும் சேர்த்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசு அதிகரித்தது.
 
இதனால் 66 ரூபாய் 8 காசாக இருந்த பெட்ரோல் விலை 69 ரூபாய் 45 காசாக உயர்ந்தது. இதேபோல் உள்ளூர் வரியையும் சேர்த்து சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசு உயர்ந்தது. 
 
இதனால் 52 ரூபாய் 76 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாய் 74 காசாக அதிகரித்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.