வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2015 (17:41 IST)

மேகிக்கு மீண்டும் தடை வருமா? : மஹாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி மீதிருந்த தடை நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என மஹராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது.


 
 
சுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனைதொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவின்படி, மஹாராஷ்டிரா, தில்லி, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், கேரளா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நெஸ்லே இந்தியா நிறுவனம், மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
வழக்கின் முடிவில், மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், மேகி நூடுல்ஸின் தரம் குறித்த புதிய ஆய்வை நடத்தவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ்களில் ரசாயனங்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. இதனால், நெஸ்லே நிறுவனம், மேகியின்  விற்பனையை விரைவில் தொடங்க முடிவு செய்திருந்தது.
 
இந்நிலையில்,மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என மஹராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது.  
 
இதுகுறித்து கருத்து கூறிய மஹாராஷ்டிர அரசு அதிகாரி ஒருவர் “மேகி நூடுல்ஸின் சில பாக்கெட்டுகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பாக்கெட்டுகளில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருள்கள் இருக்கலாம். பொதுமக்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீட்டிக்கவே அரசு விரும்புகிறது” என்றார் 
 
உச்சநீதிமன்றத்தில் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டுவதில் மஹாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது.
 
தடையை நீக்கியவுடன் நெஸ்லே நிறுவனம், மேகி விற்பனையை சமீபத்தில் ஆன்-லைனில் தொடங்கியது. அப்போது  ஐந்தே நிமிஷங்களில் 60 ஆயிரம் மேகி பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.