வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (16:20 IST)

ஹோம் இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை....

பொதுவாக புதிதாக வீடு கட்டுபவர்கள் அல்லது கட்டிய வீட்டை வாங்குபவர்கள், வீட்டின் மீது வேண்டா வெறுப்போடு இன்சூரன்ஸ் எடுப்பார்கள்.  அதுவும், அந்த வீட்டின் மீது அவர்கள் வாங்கியிருக்கும் கடன் முடியும் வரை மட்டுமே. 


 

 
ஆனால் அது தவறு. நாம் பயன்படுத்தும் வாகனங்கள், குழந்தைகள் மற்றும் நம் பெயரில் இன்சூரன்ஸ் எடுப்பது போல் நம்முடைய வீட்டிற்கும் இன்சூரன்ஸ் எடுக்கலாம். அதனால் பல பலன்கள் உண்டு என்பது இங்கு பலருக்கும் தெரியாமலே இருக்கிறது.
 
அதேபோல், இன்சூரன்ஸ் எடுப்பவர்களுக்கும் அதில் இருக்கும் சாதக பாதக விஷயங்கள் பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. நாம் எடுத்திருக்கும் இந்த இன்சூரன்ஸ் மூலம் என்ன நன்மை கிடைக்கும்? அந்த பாலிசியில் என்னென்ன நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன என்பது பற்றியும் பலருக்கு தெளிவு இல்லை.
 
அதாவது நாம் நமது வீட்டின் மீது எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிஸி மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இன்சூரன்ஸுக்காக விண்ணப்பிக்கும் போது, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை நன்றாக படித்து பார்க்க வேண்டும்.
 
ஒரு உதாரணத்திற்கு அந்த இன்சூரன்ஸை நமக்கு விளக்கும் ஒரு முகவர் அதில் இயற்கைப் பேரழிவு, தீ விபத்து, திருட்டு ஆகியவற்றுக்கு உங்களுக்கு இந்த காப்பீடு உதவும் என கூறியிருப்பார். நம் வீட்டில் மின்சார கசிவு மூலம் ஒரு தீ விபத்து ஏற்பட்டு முக்கிய பொருட்கள் தீயில் கருகியிருக்கலாம். இதன் அடிப்படையில் நீங்கள் காப்பீடு கோரியிருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஏன் தெரியுமா? 


 

 
மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள் அளவுக்கு மீறி இயங்கி அதனால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நாங்கள் காப்பீடு அளிக்கமாட்டோம் என நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் படித்து பார்த்திருக்க மாட்டீர்கள்.
 
பொதுவாக வீட்டின் மீது பாலிசி எடுத்த பின்னர் நம் வீட்டின் கட்டிடம், அதற்குள் உள்ள பொருட்கள் ஆகியவற்றுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உத்தரவாதமளிக்கும்.  மனித தவறுகள் மற்றும் இயற்கை பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், இடி, மின்னல் மற்றும் புயல் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதங்கள் பரிசீலிக்கப்படும். ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு உங்களுக்கு காப்பீடு கிடைக்காது. உங்களுக்கு அந்த காப்பீடு வேண்டுமெனில், அதை முதலிலேயே நீங்கள் தேர்ந்தெடுத்து, அதற்கான கூடுதல் பிரிமியத்தை செலுத்த வேண்டும். 
 
இதே முறைதான் திருட்டு சம்பவங்களுக்கும் பொருந்தும். விலை உயர்ந்த நகைகளை நீங்கள் அதற்குரிய பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்து, அது களவு போனால் மட்டுமே உங்களுக்கே காப்பீடு கிடைக்கும்.
 
எனவே நாம் எடுக்கும் இன்சூரன்ஸ் மூலம் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து அதற்கான பிரீமியமும் கட்டிவருவதே நன்மை தரும்.