வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (07:57 IST)

பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ரகுராம் ராஜன்

கிரீஸ் நாட்டு பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பில்லை என்றும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
 
 இது குறித்து ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இந்தியா முழுவதும் மண்டல வாரியாகச் சென்று நிர்வாக அளவில் கூட்டம் நடத்தி வருகிறேன். சென்னை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் தற்போது நிறைவுபெற்றது.
 
கிரீஸ் நாட்டில் பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பாதிப்பு, இந்தியாவை நேரடியாக பாதிக்காது. அன்னியச் செலவாணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
இந்திய பொருளாதார வளர்ச்சியில் சீர்திருத்தம் தேவை. தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால், ஏற்கனவே முடங்கிப்போன நிலையில் இருக்கும் அரசுத் திட்டங்களை சீர்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
அனைத்து ஆசிய நாடுகளிலும் ஏற்றுமதி சரிவடைந்த நிலையில் உள்ளது. இந்தியாவிலும் அதன் பிரதிபலிப்பு காணப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றமே இதற்கு முக்கிய காரணம்.
 
இந்தியர்கள் அனைவரையுமே நிதிக் கட்டமைப்புக்குள் (பைனான்ஷியல் இன்குளூசன்) கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன இதற்கான நிதி ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது.
 
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையில் இந்த குழு அமைக்கப்படும். இதில் பொருளாதார நிபுணர்கள், வல்லுனர்கள், மத்திய-மாநில அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.
 
ஏற்கனவே இந்தியர்களின் வங்கி கணக்குகள் உட்பட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரையும் அடுத்த ஐந்தாண்டுக்குள் நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டத்தை இந்தக்குழு தயார் செய்யும்.
 
தேச அளவில் பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை என்றாலும்கூட, இதுவரை வழக்கமான அளவு பெய்துள்ளது. விவசாய உற்பத்தி பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரிவதற்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். எனவே கடன் வட்டி விகிதத்தை வங்கிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
 
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் அதை புழக்கத்தில் விடுவது பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.
 
ரூபாய் நோட்டுகள் இல்லாத பணப்பரிமாற்றத்தை மத்திய நிதித்துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். நாங்களும் மின்னணு பணப்பரிமாற்றம், ‘‘மொபைல் பேங்கிங்’’ போன்றவை, மக்களிடையே இன்னும் அதிகமாக செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் மத்திய அரசும் அதிக முனைப்பு காட்டுகிறது.
 
விலைவாசி ஏற்றம், பணவீக்கம் போன்றவை கவலை அளிப்பவைதான். ஆனாலும் சிமெண்ட் விலை ஏற்றம் கண்டிருந்தாலும், சர்க்கரையின் விலையில் எதிர்பாராத அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே இதில் ஏற்ற இறக்கம்தான் காணப்படுகிறது.
 
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளன.
 
பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. யூரோ பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய பண மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.