வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (16:57 IST)

அலைக்கற்றை ஏலம்: மத்திய தொலைத் தொடர்புத் துறை ஆலோசனை

அடுத்த ஆண்டு, பதினெட்டு தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவைக்கான உரிமங்கள் காலாவதியாக உள்ளநிலையில், புதிய ஏலம் நடத்த மத்திய தொலைத் தொடர்புத்துறை, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்துடன் ஆலோசனைநடத்தி வருகின்றது.
 
ஒரு குறிப்பிட்ட தொலைத் தொடர்பு வட்டத்தில் அலைக்கற்றை உரிமம் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு முன்பாக, புதிய உரிமத்துக்கான ஏலத்தை நடத்தி முடிக்க வேண்டுமென, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை தொலைத் தொடர்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா முழுவதுமுள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில், பதினெட்டு வட்டங்களுக்கான அலைக்கற்றை உரிமங்கள் காலாவதியாகின்றன. எனவே இந்த வட்டங்களுக்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது.
ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் ஏழு உரிமங்கள், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நான்கு உரிமங்கள், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஏழு உரிமங்கள், வோடாஃபோன் நிறுவனத்தின் ஆறு உரிமங்கள் காலாவதியாக உள்ளன. மொபைல்போன் மற்றும் வயர்லெஸ் சேவைகளை வழங்குவதற்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் வழியாக மட்டுமே பெறமுடியும்.
 
மேலும், சிடிஎம்ஏ அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டு வருகிறது. இதற்கான பரிந்துரையை டிராய் ஏற்கெனவே மத்திய அரசுக்கு அளித்துள்ளது. இது தொட்பாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்துடன் (டிராய்) ஆலோசனை நடத்திவருவதாக மத்திய தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
டிராயுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அதன் பரிந்துரையை மத்திய அரசு பெறும். அதன் பிறகு ஏல நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.