1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 4 ஜனவரி 2015 (10:28 IST)

மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க தயாராக உள்ளது: அருண் ஜேட்லி உறுதி

பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.
 
மகாராஷ்டிர மாநிலம் புணேவில், வங்கித் துறையின் 2 நாள் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில்,அருண் ஜேட்லி கூறியதாவது:-
 
நாட்டில் 27 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. மொத்த நிதிக் கட்டமைப்பில் 70 சதவீதத்துக்கும் மேல், இந்த வங்கிகள்தான் கையாளுகின்றன. எனவே, பொதுத் துறை வங்கிகளைப் பீடித்துள்ள பிரச்னைகளைக் களைவது அவசியமாகும்.
 
அவற்றுக்கான தீர்வுகளை காணும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும். வாராக் கடன் வங்கித் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.
 
கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் 4.5 சதவீதமாக உள்ளது. கடன்களைத் திரும்பப் பெறுவதில், தனியார் வங்கிகளைவிட, பொதுத் துறை வங்கிகள் பின்தங்கி உள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
சில கடன் விவகாரங்களில், வங்கிகளின் வாராக் கடன்களை ஏற்றுக் கொள்ள முடியாது. உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறை, தொழில் முதலீடுகள் ஆகியவற்றுக்கு வங்கிகள் கடன் அளிக்கும் தேவை தற்போது உள்ளது.
 
இவற்றைக் கருத்தில்கொண்டு, கடன் உள்ளிட்ட விஷயங்களில் முடிவெடுப்பது, பணியாளர் தேர்வு போன்றவற்றில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று அருண் ஜேட்லி கூறினார்.