வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (11:00 IST)

பிளிப்கார்ட்டை வீழ்த்திய அமேசான்.....

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக வளம் வந்த பிளிப்கார்ட் நிறுவனம், இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் நீண்ட காலமாகத் தக்கவைத்திருந்த முதல் இடத்தைத் தற்போது அமேசான் நிறுவனத்திடம் இழந்துள்ளது. 


 
 
பிளிப்கார்ட்:
 
இந்தியாவில் 2007ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பிளிப்கார்ட், துவக்கம் முதலே முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர்களை ஈர்க்க துவங்கியது. இதன் எதிரொலியாக 2011ஆம் ஆண்டு முதல் நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனம் என்ற பெயரை பெற்றது. 
 
அமேசான்:
 
அமெரிக்கா நாட்டை முக்கிய வர்த்தகச் சந்தையாகக் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் ஈகாமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப சேவையை அளித்து வரும் அமேசான், சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கியது. ஆரம்பத்தில் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தொடர் முதலீட்டு, விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பு எனப் பல விதத்தில் அமேசான் இந்தியா தனது வளர்ச்சி பாதையை அமைத்துள்ளது.
 
அமேசான் வளர்ச்சி:
 
இந்தியாவில் முழுமையான ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கி 3 வருடங்கள் ஆன நிலையில் 2016ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தை எட்டியுள்ளது அமேசான். இதனால் ஈகாமர்ஸ் வர்த்தகச் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் தனது முதல் இடத்தை அமேசான் நிறுவனத்திடம் இழந்து 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
 
ஜூலை மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மொத்த விற்பனை மதிப்பு 2,000 கோடி ரூபாயைத் தொட்ட நிலையில், அமேசான் நிறுவனம் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்தை எட்டியுள்ளது.
 
இந்நிலையில் ஒரு காலத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக விளங்கிய ஸ்னாப்டீல் நிறுவனம் 50 சதவீத வர்த்தகச் சரிவில் வெறும் 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது.
 
இந்நிறுவனத்தின் 2,000 வர்த்தகம் என்பது மைந்திரா, ஜபாங் ஆகிய நிறுவனங்களின் வர்த்தகம் சேர்க்கப்படாதது. மைந்திரா, ஜபாங் ஆகிய நிறுவனங்களின் வர்த்தகத்தைச் சேர்த்தால் அமேசான் நிறுவனத்தை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது பிளிப்கார்ட். ஆனால் இவ்விருநிறுவனங்களையும் தனி நிறுவனமாகவே நிர்வாகம் செய்து வருகிறது பிளிப்கார்ட்.