ஹசன் அலி மீது வருவாயை மறைத்ததாக வழக்குத் தொடர முடிவு

Webdunia| Last Modified சனி, 19 பிப்ரவரி 2011 (13:49 IST)
FILE
இந்தியாவிலிருந்து 8 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சட்டத்திற்குப் புறம்பான வகையில் அயல் நாடுகளுக்கு நிதி கடத்தியதாக வருமான வரித்துறையால் குற்றம் சாற்றப்படும் பூனா குதிரை பண்ணை முதலாளி ஹசன் அலி கான் மீது வருவாயை மறைத்த குற்றத்திற்காக வழக்குத் தொடர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

மும்பை நீதிமன்றத்தில் ஹசன் அலி கான் மீது வருவாயை மறைத்து குற்றம் செய்துள்ளார் என்று புகார் மனு தாக்கல் செய்வதென்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி, அந்நாட்டு வங்கியில் ஹசன் அலி கான் வைத்துள்ள கணக்கு விவரங்களைப் பெற முடிவு செய்துள்ளது.
ஹசன் அலி கான் வைத்துள்ள கணக்கு விவரங்களை அறிய வருமான வரித்துறை மேற்கொள்ளப்போகும் மூன்றாவது முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார குற்றங்களை புலனாய்வு செய்யும் அமலாக்க இயக்ககம் (Enforcement Directorate) ஹசன் அலி கான் பயன்படுத்திவந்த கணினிகளை சோதனையிட்டதில் சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரிலுள்ள யுபிஎஸ் வங்கியில் மட்டும் அவர் 8.04 பில்லியன் டாலர் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இந்த புகார் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. தங்களுடைய மதிப்பீட்டின் படி ஹசன் அலி கான் ரூ.70,000 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கூறியுள்ளது.

இது மட்டுமின்றி, “வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு மிகப்பெரிய அளவிற்கு அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் அதனை குற்றச்செயலாகவும் வழக்குப் பதிவு செய்ய இடமுள்ளது” என்று வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹவாலா பரிவர்த்தனை மூலம் பணத்தை கடத்திய குற்றத்தை (Prevention of Money Laundering Act - PMLA) ஹசன் அலி செய்துள்ளார் என்று அமலாக்க இயக்ககம் கூறுகிறது. ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதனிடம் போதுமான ஆதாரம் இல்லை. இதன் காரணமாகவே, அதன் கோரிக்கையை முதல் முறையாக சுவிஸ் அரசு நிராகரித்துவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :