வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:17 IST)

ராகுல் காந்தி முரண்பாடானவர் - நிதிஷ் குமார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சிலும், செயலிலும் முரண்பாடு உள்ளது என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் அளித்த பேட்டி:-
FILE

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சிலும், செயலிலும் அதிக முரண்பாடுகள் உள்ளன. இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு, ராகுல் அளிக்கும் விளக்கத்தை ஏற்க முடியாது. இரு கட்சிகள் இடையே ஏற்படும் கூட்டணியில் ஆச்சர்யம் இல்லை. ஐ.மு கூட்டணியின் முதல் ஆட்சியில் லாலு கட்சி அங்கம் வகித்தது. 2வது ஆட்சியில் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதனால் இந்த கூட்டணி எதிர்பார்த்ததுதான்.

ஊழல் விஷயத்தில் சமரசம் கிடையாது என ராகுல் கூறுகிறார். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே ஊழலில்தான் நடந்தது. ஐ.மு கூட்டணி ஆட்சியில் ஊழலும், விலைவாசியும் அதிகரித்ததால்தான், கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவு குறைந்தது.

ஊழலையும், விலைவாசி உயர்வையும் அவரால் கை கழுவிவிட முடியாது. இந்த துயரங்களுக்கு மக்கள் ராகுலை பொறுப்பேற்கச் செய்வர். ராகுல் முரணானவர் மட்டும் அல்ல, திடீரென தனது நிலையை மாற்றக் கூடியவர். கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
FILE

அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, திடீரென அதற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின்பே அவசர சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

மத்தியிலும் பீகாரிலும் இருந்த காங்கிரஸ் அரசுகள்தான் கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 1989ல் பாகல்பூர் கலவரம் ஆகியவற்றுக்கு பொறுப்பு. அதேபோல், குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கலவரத்துக்கு அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ. அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த கலவரங்கள் எல்லாம் நாட்டையே உலுக்கியவை. இதற்காக இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பை யாரும் தட்டிக் கழிக்க முடியாது.

1990ல் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் பாகல்பூர் கலவர வழக்கு புலனாய்வில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்து குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் லாலு பிரசாத் என்றும் நிதிஷ்குமார் குற்றஞ்சாட்டினார்.