1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (16:09 IST)

மக்களைவை தேர்தல்; அதிமுக-சிபிஐ கூட்டணி

FILE
மக்களவைத் தேர்தலில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால், ஜெயலலிதா பிரதமராவதற்கான வாய்ப்புகள் உருவாகவே செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் கூறினார்.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் பகல் 1.20 மணியளவில் வந்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் ஜெயலலிதா, ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

ஜெயலலிதா: மிகவும் மகிழ்ச்சியோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கும். கூட்டணி தொடர்பான இதர விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும்.

ஏ.பி.பரதன்: முதல்வர் ஜெயலலிதா கூறிய அனைத்தையும் நானும் ஏற்றுக்கொள்கிறேன். மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ஏ.பி.பரதனிடம், உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை அறிவிப்பீர்களா? தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளார்கள் என்றார்.

ஏ.பி.பரதன்: எங்கள் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றால், அந்த வாய்ப்பு (ஜெயலலிதா பிரதமராவதற்கு) உருவாகவே செய்யும். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது.

ஜெயலலிதா(குறுக்கிட்டு): இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். இதுபோன்ற விவகாரங்கள் பிறகு முடிவு செய்யப்படும். தற்போது எங்களின் நோக்கம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளிலும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வெற்றிபெறுவதே ஆகும் என்றார்.

உங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஜெயலலிதா: இது தொடர்பாக அதிமுக சார்பாக நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அமைதி, செழுமை, முன்னேற்றம் என்பதே எங்கள் கூட்டணியின் பிரசார யுக்தியாகவும், முழக்கமாகவும் இருக்கும்.

சுதாகர்ரெட்டி: காங்கிரஸ் கட்சியைத் தோற்கப்படிப்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். ஊழலில் காரணமாக காங்கிரஸ் இயல்பாகவே தோற்றுப் போகக்கூடிய நிலையில்தான் உள்ளது. மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

தமிழகத்தில் அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கூட்டணி ஏற்பட்டதுபோல மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் மற்ற மாநிலங்களிலும் ஒருங்கிணைய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஜெயலலிதா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றார்.