வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:51 IST)

ஜெயலலிதா, கருணாநிதியால் மோடி அரசில் சேர முடியாது - பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதா, கருணாநிதிக்கு மோடி அரசில் சேர முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜெயசங்கரை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா ராமநத்தம், பெண்ணாடம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:–
 
மோடி தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரும்பும் வெற்றி படைக்கும் கூட்டணியாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். முதல் தடவையாக 5 முனை போட்டியாக தேர்தல் நடைபெற உள்ளது. நமது கூட்டணி இளம் சிங்கங்களின் கூட்டணி. லஞ்சம், ஊழல் செய்து மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக.தான் நமது எதிரிகள். விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.
 
பாமகவுக்கு பல தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம். இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதிமுக, திமுக கட்சிகள் கருத்து வேறுபாடுகள் என தூண்டி குளிர்காய விரும்புகின்றனர். அதற்கு இடம் தரக்கூடாது. இன்று அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்யும் ஒரே தலைவர் விஜயகாந்த் தான்.
 
நமது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி 320 தொகுதிகளில் வெற்றி பெறுவார். அதிமுக தவிர வேறு எந்த கட்சிக்கும் ஓட்டுப் போடாதே என்கிறார் ஜெயலலிதா. முதலில் ஜெயலலிதா எந்த கூட்டணி என்பதை தெளிவு படுத்தட்டும். ஜெயலலிதா எந்த தொகுதியிலும் போட்டியிட வில்லை. தமிழக மக்கள் முதலில் அவரை வெற்றி பெறவைக்கட்டும். பின்னர் ஜெயலலிதா பிரதமர் பற்றி பேசலாம். அவர் பிரதமர் பற்றி கனவு காண்பது பகல் கனவு.

3 மாதங்களில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் மின் பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. இதனால் தமிழ்நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி விட்டது. நாடு முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவை அதிகரித்து விட்டது. சாதாரண குடிநீர் பிரச்சினைக்கு கூட தீர்வு காணவில்லை. 
 
ஜெயலலிதா சொல்லும் வளம் அவரது கட்சிக்காரர்களுக்குத்தான் உள்ளது. நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் பெற்றதுதான் அவர் கண்ட வளர்ச்சி. ஓட்டு கேட்க தவறாமல் வரும் ஜெயலலிதாவால் மிக்சி, கிரைண்டர் கூட தரமுடிய வில்லை. சென்னையில் டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் சாப்பிடத்தான் அம்மா உணவகம் உள்ளது.
 
ஜெயலலிதாவுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து, கலைஞருக்கு இவ்வளவு சொத்து என போட்டி போட்டுக்கொண்டு பட்டியல் போட்டு சொல்வது வெட்கப்பட வேண்டிய ஒன்று. இந்த ஊழல் கட்சிகளை நாட்டைவிட்டு துரத்த வேண்டும். மோடி பிரதமரானால் மின் பிரச்சனைக்கு தீர்வு காண்பார். அனைத்து நதிகளையும் இணைத்து குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பார்.
 
கருணாநிதி, ஜெயலலிதா என யார் வந்து குழப்பினாலும் மக்கள் குழம்பிவிடாமல் ஓட்டுபோட்டால்தான் மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். மோடி அரசில் ஜெயலலிதாவும் சேர முடியாது, கருணாநிதியும் சேரமுடியாது. இந்த மாற்றத்தை செய்யவேண்டிய பொறுப்பு மக்களிடம் இருக்கிறது என்று பிரேமலதா பேசினார்.