1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:50 IST)

நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் சார்பாக மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. நக்மா பிரச்சாரத்திற்கு செல்லும்போது ஏற்பட்ட சில விரும்பத்தகாத சம்பவங்களே இதற்கு காரணம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Actress Nagma
நடிகை நக்மா உத்தர பிரதேச மாநிலம் மீரட் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கிறார்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது.
 
சமீபத்தில் நக்மா அங்குள்ள ஹபூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹஜ்ராஜ் சர்மா உள்ளிட்ட நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். பிரச்சாரத்தை முடித்த நக்மா, அப்பகுதியில் இருந்து புறப்பட தயாரானபோது மக்கள் கூட்டத்தை விலக்கி விட்டு அங்கு வந்த ஹஜ்ராஜ் சர்மா எம்.எல்.ஏ., திடீரென நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டதாக கூறப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.வின் இந்த செயலை எதிர்பாராத நக்மா, அவரது கையை கோபமாக தட்டிவிட்டதுடன், உடனே காரில் ஏறி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்துக்கு மகளிர் அமைப்புகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ஹஜ்ராஜ் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. ஆனால் ஹஜ்ராஜ் சர்மா கூறும்போது ‘‘நான் கூட்டத்தில் இருந்து நக்மாவை பாதுகாக்கத்தான் முயன்றேன். மற்றபடி எதுவும் நடைபெறவில்லை’’ என்றார்.
 
இதனையடுத்து மீரட் நகரில் நடிகை நக்மா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். நக்மாவை அருகில் சென்று பார்ப்பதற்காக பல இடங்களில் கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்தார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நக்மா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இந்த சம்பவத்தினால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நான் மீரட் பக்கமே வரமாட்டேன்’’ என்றார். இது தொடர்பாக நடிகை நக்மா காங்கிரசிடம் புகார் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நடிகை நக்மாவின் கூட்டத்திற்கும் அதிகமான கூட்டம் கூடுகிறது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் கவனம் செலத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.