வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:29 IST)

அன்னிய நேரடி முதலீட்டை திமுக என்றும் ஆதரித்ததில்லை - மு.க.ஸ்டாலின்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை திமுக என்றுமே ஆதரித்தது கிடையாது. மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
FILE

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர், காயல் பட்டிணம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், பண்டார விளை, செபத்தையாபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் நேற்று பிரசாரம் செய்தார்.

பின்னர் இரவு தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பிரசார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சித்து பேசி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் இதுவரை பாரதிய ஜனதாவை விமர்சிக்கவில்லை? என கடந்த 3 நாட்களாக நான் கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால் இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை.

மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது தமிழகத்துக்கு எதையும் நிறைவேற்றவில்லை என தவறான குற்றச்சாட்டை திமுக மீது முதலமைச்சர் கூறியுள்ளார். ரூ.908 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றுவது, 90 ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை கூறி கொண்டே போகலாம்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நடந்தே சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். இதற்காக பக்கிள் ஓடை திட்டத்தை நிறைவேற்ற 3 கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றன.

இந்த ஓடையின் ஓரத்தில் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் ஆட்சி மாறிய போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த பணிகளை நிறைவேற்றவில்லை.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் திமுக துரோகம் செய்துவிட்டது போல அபாண்டமான குற்றச்சாட்டை முதல்வர் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை திமுக என்றுமே ஆதரித்தது கிடையாது. மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டோம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்த்தே பேசியுள்ளனர்.

சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் தமிழகம் மட்டும்மின்றி இந்தியாவே பொருளாதார முன்னேற்றம் அடையும். ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது ஏன் என்று தெரியவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.