வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:41 IST)

புதுச்சேரி பாஜக கூட்டணியில் குழப்பம்: மோடி படத்துடன் பாமக, என்ஆர் காங்கிரஸ் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கூட்டணியில் ஏகப்பட்ட இழுவரிகள் இருந்தாலும் ஒரு வழியாக தொகுதி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் புதுவை பாஜக கூட்டணியில் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
PMK & NR Congress Clash in Puducherry
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ், பாமக இரு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளரை நிறுத்தியுள்ளன. என்ஆர் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணனும், பாமக சார்பில் அனந்த ராமனும் போட்டியிடுகின்றனர்.
 
எங்களுக்கு தான் பாரதீய ஜனதா கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என இருகட்சிகளுமே கூறி வருகின்றன. இருகட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
என்ஆர் காங்கிரஸ் பிரச்சார சுவரொட்டி மற்றும் பேனர்களில் மோடி படத்தை பிரசுரித்துள்ளனர். ‘மோடியை பிரதமராக்க என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவு தாருங்கள்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அதேபோல பாமக பேனர்களிலும் மோடி படம் இடம்பெற்றுள்ளது.
 
இது தொடர்பாக பாமக வேட்பாளர் அனந்த ராமன் கூறும்போது, பாமகவுக்குதான் பாரதீய ஜனதா கூட்டணியில் புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மோடி படத்தை பயன்படுத்த நாங்கள்தான் உரிமையுடையவர்கள். இன்னும் ஓரிரு நாளில் பாரதீய ஜனதா எங்களுக்கு ஆதரவு தருவதாக முறைப்படி அறிவிக்கும் என்று கூறினார்.
 
இருகட்சிகளின் பிரச்சாரமும் பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
 
புதுவை கூட்டணி தொடர்பாக அகில இந்திய பாரதீய ஜனதா இதுவரை உறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனாலும் உள்ளூர் பாரதீய ஜனதாவினர் எங்களுக்கு மேலிடம் என்ஆர் காங்கிரசை ஆதரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது என்று கூறுகின்றனர். அவர்கள் என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
 
பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, பாமகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இன்னொரு முக்கிய கட்சியான தேமுதிக யாரை ஆதரிப்பது என்று இதுவரை அறிவிக்கவில்லை.