யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, சிந்தித்து வாக்களியுங்கள் - விஜயகாந்த்

Webdunia|
தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக யார் காசு கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளுங்கள். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை இப்படித்தான் மக்கள் வாங்கணும்போல இருக்கு. ஆனால் ஓட்டை மட்டும் சிந்தித்து போடுங்கள்.

விஜயகாந்த் டெல்லிக்கு போனார் அங்கு பணம் வாங்கி விட்டார் என்று சொல்கிறார்கள். பெட்டி வாங்கின அனுபவம் எனக்கு இல்லை. 40 வருடங்களாக இருக்கின்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். எனக்கு அந்த ஆசை இருந்தால், ராஜ்யசபை சீட்டுக்கு நான் எப்போதோ போய் இருப்பேனே!

வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை கொண்டுவருவதாக சொல்கிறார்கள். உங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தையே கொண்டு வரமுடியலை. அது மட்டும் எப்படி முடியும்?. இது மக்களை ஏமாற்றும் வேலை ஆகும். மக்களாகிய நீங்கள் ஊழல் செய்திட வழி விட்டால்தான் அவர்களிடம் பணம் பெருகி போய்விட்டது. மக்களுக்கு நல்லது செய்தால் எல்லாமே நல்ல நேரம்தான்.
வளம், வளர்ச்சி எல்லாம் ஆட்சி நடத்துபவர்களிடையே தான் இருக்கிறதே தவிர மக்களிடம் இருந்ததாக தெரியவில்லை. எனவே இந்தமுறை மாற்றத்தை வேண்டி பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.

வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் பகுதி திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது வடசென்னை தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை கட்சித் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தேமுதிகவுக்கு ஆதரவாக திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கே வந்து ‘எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்குங்கள்’ என்று தைரியமாக கூறி சென்றிருக்கிறார். தமிழக அமைச்சர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. இந்தியா ஏழை நாடு என்று சொல்லிக்கொண்டே நாட்டை சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா ஒன்றும் ஏழை நாடு கிடையாது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு காங்கிரஸ் செயல்படுகிறது. கையாலாகாத பிரதமராக மன்மோகன்சிங் இருக்கிறாரென்று இவர்கள் சொல்லலாம். ஆனால் நாம் மட்டும் இவர்களை ஏதாவது சொன்னால் உடனே ‘அவதூறு’ வழக்கு என்கிறார்கள்.

‘அம்மா’ உணவகம், ‘அம்மா’ குடிநீர், ‘அம்மா’ மருந்தகம் போன்றவற்றை இவர்களே திறந்து வைத்துவிட்டதால், சிறு வியாபாரிகள் சிரமப்படுகிறார்கள்.
நாடு வளம்பெற வேண்டுமென்றால் திமுக, அதிமுக ஆண்டது போதும். நாடுமுழுவதும் எங்கு பார்த்தாலும் ஊழல் திளைத்திருக்கிறது. நாடு வல்லரசு ஆகவும், மாற்றம் வேண்டியும் தேமுதிகவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :