வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 9 மே 2014 (18:28 IST)

அனல் பறக்கும் வாரணாசி தேர்தல் களம்

இந்து மதத்தின் முக்கியப் புனிதத் தலங்களில் ஒன்றாகிய வாரணாசியில்தான் இந்தியத் தேர்தலின் உச்சகட்ட யுத்தமே நடப்பது போல தோன்றுமளவுக்கு அவ்வூரில் தேர்தல் ஜுரம் பரவியுள்ளது.
 
பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கான கடுமையான யுத்தத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
 
காங்கிரசின் சார்பில் போட்டியிடும் அஜய் ராய் இஸ்லாமிய வாக்குகளை நம்பிக் களமிறங்கியிருக்கிறார்.
வாராணசி வடக்கு, வாராணசி தெற்கு, வாராணசி கண்டோன்மெண்ட், ரோஹானியா, சேவாபுரி என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் வாராணசி நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
 
2004ஆம் ஆண்டைத் தவிர, 1991ஆம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதாக் கட்சியின் வசமே இருந்துவரும் தொகுதி இது.
 
எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும் வாகனங்களின் இரைச்சலும், தூசியும், போக்குவரத்து நெரிசலும், கங்கை நதியின் மாசுபாடும், சுகாதாரமின்மையும் நகருக்குப் புதிதாக வந்திறங்கும் யாரையும் திகைக்க வைக்கும்.
 
இந்தியாவின் மிகப் பழமையான நகரமாக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் நகரம் இது.
 
ஆனால், இந்தத் தேர்தல் உற்சாகம் இதையெல்லாம் மறக்கவைத்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
 
இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் முடிவடையவிருக்கும் நிலையில், மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராகுல்காந்தி என முக்கியத் தலைவர்களால் வாராணசி திக்குமுக்காடிப் போயிருக்கிறது.