வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் க‌ட்டுரைக‌ள்
Written By Muthukumar
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (12:00 IST)

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று கொண்டிருக்கும் வேளையில்,  வெளியில் தனிக்கட்சியாக அதிக இடங்களில் நாங்களே வெல்வோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வந்தாலும் உட்கட்சித் தலைகள் வேறு விதமாக நினைக்கிறதாம்.

குறைந்த பட்சம் 120 இடங்களையாவது வெல்லவேண்டும் என்ற அடிப்படையில்தான் இப்போது வேலை நடந்து வருகிறதாம், அதற்கேற்றவாறான தொகுதிகளில்தான் கட்சித் தலைமை மும்முரம் காட்டி வருவதாக வட இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
 
முதல் 5 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 534 தொகுதிகளில் இன்னும் 311 தொகுதிகளுக்கான தேர்தல்கள் மீதமுள்ளன. இவை ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி மே 12 முடிவடைகிறது.
 
அதிகாரபூர்வமாக வெளியில் சிங்கிள் மெஜாரிட்டி தங்கள் கட்சிதான் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் குறைந்தது 120 சீட்களை வெல்வதே முக்கியம் என்று இப்போது கட்சி கருதுகிறதாம்.
120 இடங்கள் வென்று விட்டால் பிறகு தேசிய ஜன நாயகக் கூட்டணி அல்லாத ஒரு ஆட்சியை அமைத்து விடலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. மூன்றாம் அணியின் ஆதரவைப் பெற்று தேஜகூ ஆட்சி அமையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி கணக்கிட்டுள்ளதாம்.
 
இதற்காக தகுதியான வேட்பாளர்களுக்கு பணம் அதிகம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட இந்திய ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. பணத்தட்டுப்பாடு (?!) காரணமாக இன்னும் ஒரு மூத்த அமைச்சருக்கு பணம் செல்லாததால் அவரது வெற்றி வாய்ப்பு மங்கியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சர்கள், எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்தால் போதாது பிற வேட்பாளர் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதாம்.
 
காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளம் முழுமூச்சுடன் இயங்கி வருகிறதாம். அனைத்து வார இறுதி விடுமுறைகளும் இந்த ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாம். காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் வேலை என்று வலைத்தள ஊழியர் ஒருவர் கூறியதாக அதே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.