வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

லயோலா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த உதவி பேராசிரியையின் கண்ணீர் பேட்டி

FILE
லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவர் ராஜராஜன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் பாலியல் புகார் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்த அதே கல்லூரியின் உதவி பேராசிரியையாக பணி புரியும் ஜெயசாந்தி அவர்கள் நமது வெப்துனியாவிற்கு அளித்த கண்ணீர் பேட்டி வருமாறு...

என் பெயர் ஜோஸ்பின் ஜெயசாந்தி, நான் லயோலா கல்லூரி தமிழ் பிரிவில் உதவி பேராசிரியையாக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறேன்.

லயோலா கல்லூரி தமிழ் துறையின் தலைவராக வேலை செய்து வரும் பேராசிரியர் எஸ்.ஏ.ராஜராஜன் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தவறான (அசிங்கமான) சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தமிழ் துறையின் தலைவராக 2008 ஆம் அண்டு ஜூன் மாதம் பொருப்பேற்றார். தகாத வார்த்தைகளில் திட்டுவது, மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள் மற்றும் அலுவலகம் என்று கூட பாராமல் பிறர் முன்னிலையில் விடுப்பு கடிதங்களை முகத்தில் வீசி எரிவது போன்ற அவரின் நடவடிக்கைகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். ஆனால் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் பல்வேறு காரணங்கள் கூறி ஏற்க மறுத்தனர். அவரின் உள்நோக்கம் என்ன என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பிரச்சனை என்னவென்றால் நான் லயோலா கல்லூரியில் தமிழ் துறையில் மட்டுமல்லாமல் CIP(centre for international programmes) என்ற துறையிலும் ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தேன். இந்த துறை மூலம் பனைத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பற்றி புரோஜெக்ட்டுகள் செய்து இந்திய அளவில் வெற்றியடைந்து உலக அளவில கலந்து கொள்வதற்காக மாணவர்களை அழைத்துச் செல்வது போன்று நல்ல முறையில் ஈடுபாட்டுடன் வேலை செய்து வந்தேன். இதன் பிறகு பேராசிரியர் ராஜராஜனின் தொந்தரவுகள் வெளிப்படையாகிவிட்டன. அவர் என்னை பார்த்து, "நீ கணவன் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறாய், என்னுடன் வந்துவிடு, என்னுடன் லாட்ஜில் தங்க வேண்டும்". இது போன்ற, இன்னும் அவர் என்னிடம் பேசியதையெல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. அந்த அளவிற்கு கேட்க விரும்பாத வார்த்தைகளை அவர் உபயோகித்து என்னிடம் பேசினார். மேலும் நாட்கள் செல்லச் செல்ல வெளிப்படையாகவே பாலியல் உறவிற்காக என்னை துன்புறுத்தவும், நச்சரிக்கவும் ஆரம்பித்தார். இது போன்ற அவரது செயல்பாடுகளை மிகவும் கடினப்பட்டு விலக்கி, சமாளித்து வந்தேன்.

பிறகு அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்த இருக்கையை அவரது அறைக்கு மாற்றி என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இதனைக் கண்ட சக ஊழியர்கள் அவரை பற்றி என்னிடம் கூறி கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அவர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர். அவர் கல்லூரி, துறை அலுவலகம் என்று கூட பாராமல் பல விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை அடிக்கவும் முயற்சித்திருக்கிறார். அதனாலேயே அவர் ஒரு முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.

மேலும் தமிழ் துறையில் பிரின்ஸ் என்று ஒரு பேராசிரியர் உள்ளார். அவர் மது குடித்துவிட்டு கல்லூரிக்கு வருவது, பேராசிரியர்களை மிரட்டுவது மற்றும் ஆள் வைத்து அடிப்பது போன்று பல ரவுடித்தனம் செய்வது அவரது வழக்கம். இதன் காரணமாக அவரிடம் துறையைச் சார்ந்த அனைவரும் ஒதுங்கியே இருந்து வருகின்றனர்.

எனக்கு CIP புராஜெக்ட்டுக்காக ஒரு தனி அறை இருந்தது. அதனால் நான் தமிழ் துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்தேன். இதன் காரணமாக, நான் சரியாக வகுப்புகளுக்கு சென்றாலும், செல்லவில்லை என்று கூறுவார். இதனால் ஒவ்வொரு முறையும் நான் கல்லூரி நிர்வாகத்திற்கு சென்று விளக்கம் சொல்ல வேண்டி இருந்தது. அவரின் பாலியல் தொந்தரவுகளுக்கு நான் ஒத்துழைக்காததால் என் மீது பல பொய் குற்றச்சாட்டுகளை கல்லூரி நிர்வாகத்திடம் கூறிவந்தார்.

அவரின் கொடுமைகள் தாங்க முடியாமல் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்லூரியில் வளாகத்தில் உள்ள Anti sexual harassment commitee-ல் புகார் செய்தேன். புகார் செய்த பின்னர் அவரின் தொல்லைகள் அதிகரித்து விட்டன. அவர் செயலர் அருட்தந்தை ஆல்பர்ட் வில்லியமிடம் (secretary father) " நான் ஜெயசாந்தியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், அவர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார். ராஜராஜனுக்கும் செயலர் ஆல்பர்ட் வில்லியத்திற்கும் என்ன தொடர்பு என்று எனக்கு தெரியாது. ஆல்பர்ட் வில்லியம் என்னை அழைத்து "ராஜராஜன் உன் அண்ணன் மாதிரி, புகாரை வாபஸ் வாங்கிக்கொள்" என்று கூறினார். அவர் கூறியதற்கு நான் "ஒரு அண்ணன் தான் லாட்ஜ்க்கு அழைப்பாரா?" என்று கேட்டேன். அதற்கு ஆல்பர்ட் வில்லியம் "ராஜராஜன் என்ன உன்னை கற்பழித்தா விட்டார்" என்று கேட்டார்.

பின்னர் ஆல்பர்ட் வில்லியம் "நான் ராஜராஜனுக்காக உன்னிடம் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன், புகாரை வாபஸ் வாங்கிக்கொள்" என்று கேட்டார். அதற்கு நான் "கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக நீங்கள் கேட்கிறீர்கள், மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக, கடிதத்தில் கொடுங்கள்" என்று நான் கேட்டேன். இது இப்படியே பல நாட்கள் தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் இந்த புகாரை Anti sexual harassment commitee விசாரிக்க வேண்டாம் என்று கூறி எனக்கு சில வெவ்வேறு கமிட்டிகளை பரிந்துரை செய்தனர். அதில் ஒன்று ராஜராஜன் மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் கமிட்டி. இந்த கமிட்டியில் உள்ளவர்கள் என் பக்கம் 3 பேரும், அவர் பக்கம் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு சாட்சி கூறுவதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இவையெல்லாம் நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைப்பதற்காக கமிட்டியினர் ஏற்பாடு செய்தனர். அதற்கு நான் "உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட anti sexual harassment commitee உள்ள போது மற்ற கமிட்டிகள் எதற்கு" என்று கேட்டேன்.

நான் புகாரை வாபஸ் வாங்க மறுத்ததால் பேராசிரியர் ராஜராஜனுடன் கூட்டு வைத்திருக்கும் பேராசிரியர் பிரின்ஸ் என்னை அடிப்பதற்காக ரயில் நிலையத்திற்கு கூலிப்படையை ஏவினார். என்னுடன் வந்த சக ஊழியர்கள்தான் அந்த ஆபத்திலிருந்து என்னை காப்பாற்றினார்கள். அவ்வாறு என்னை காப்பாற்றியவர்களுக்கெல்லாம் அடுத்த சில நிமிடங்களில் பிரின்ஸ் செல்போனில் அழைத்து அந்த பெண்ணை எதற்காக காப்பாற்றுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் கல்லூரியில் நிரந்தரப்பணி வழங்குவதாக ஆல்பர்ட் வில்லியம் கூறியுள்ளார், இனி அப்பெண்ணை காப்பாற்றாதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

என்னை அடிப்பதற்காக அவர்கள் கூலிப்படையை ஏவியது குறித்து 2013 பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். மேலும் என்னை காப்பாற்றியவர்களுக்கு உடனே போன் செய்து மிரட்டும் விதமாக " உங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க உள்ளோம், அப்பெண்ணை ஏன் காப்பாற்றினீர்கள் என்று கூறியது குறித்து ஆல்பர்ட் வில்லியத்திடம் கேட்டதற்கு அவர், "அவன் (பிரின்ஸ்) அப்படித்தாம்மா, தண்ணியடிச்சுட்டு ஒரு மாதிரி பேசுவான், தண்ணி அடிக்காம ஒரு மாதிரி பேசுவான்" என்று கூறினார்.

Anti sexual harassment commitee விசாரணை செய்யாமல் பல்வேறு தடைகளை அவர்கள் ஏற்படுத்தினர். ஒரு வழியாக விசாரணை முடிந்தது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி என்து புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை நிர்வாகத்திடம் அளித்தது. ஆனால் அறிக்கை தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது புதிய கல்லூரி முதல்வரிடம் கேட்ட போது, திண்டுக்கல்லில் உள்ள புரோவின்சியல் அருட்தந்தையிடம் அறிக்கை போயுள்ளது, அவர் அறிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கச் சொல்கிறாரோ அதன் பிறகு தான் நான் எதுவாக இருந்தாலும் செய்ய முடியும் என்று கூறினார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிறகு திண்டுக்கல்லில் உள்ள அருட்தந்தையிடம் போய் கேட்ட போது, "அது போன்ற எந்த ஒரு விவரமும் வரவில்லை" என்று கூறினார். பின்னர் அந்த அறிக்கையை பார்த்த பிறகு தான் அது ராஜராஜனின் ஊழல் சம்பந்தப்பட்டது என்று தெரியவந்தது.

இதற்கு முன்னதாக Anti sexual harassment commitee எனது புகாரை எடுத்துக்கொள்வதற்கு பேராசிரியர் ராஜராஜனின் தூண்டுதலின் பேரில் இந்த புகாரை Anti sexual harassment commitee விசாரிக்க வேண்டுமா என்று வழக்கறிஞர் ஒருவரிடம் சட்ட ஆலோனை கேட்டனர். வழக்கறிஞர் ஒரு வாரம் நேரம் எடுத்து ஆராய்ந்து, இந்த புகாரை Anti sexual harassment commitee தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இந்த புகார் உச்சநீதிமன்ற விசாகா ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் உள்ளதா என்று 2 வழக்கறிஞர்களிடம் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களும் புகார் சட்டப்பூர்வமானது தான் என்று கூறினர். அதன் பின்னரும் இந்த புகாரின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிறகு 2013 ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி என் புகாரை விசாரிக்க கட்டப்பஞாயத்து நடத்தும் விதமாக 4 பெண்கள் கல்லூரி முதல்வர் ஜோசப் ஆண்டனிசாமி அனுப்பியதாக கூறி என்னிடம் வந்து உங்கள் பிரச்சனை குறித்து எங்களுக்கு தெரிய வேண்டாம், அது எங்களுக்கு தேவையும் இல்லை, இந்த பிரச்சன்னைக்கு நீங்களே தீர்வு சொல்லுங்கள் என்று கூறினர். அதற்கு நான் பிரச்சனை குறித்து தெரியாமல் நீங்கள் என்னிடம் பேசுவது முட்டாள் தனமாக உள்ளது, கல்லூரி முதல்வர் சொன்னால் நீங்கள் என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல் என்னிடம் வந்து பேசுவீர்களா? என்று கேட்டேன்.

நான் அப்படி கூறிய பிறகும், இந்த பிரச்சனையை இப்படியே விட்டுவிடு லயோலா கல்லூரி கடந்த 87 வருடங்களாக செயல்பட்டு வருகிறது, இது ஒரு கத்தோலிக்க கல்லூரி, உன்னுடைய புகாரால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும். அந்த பேராசிரியரை உன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறோம் என்று கூறினர்.

அதற்கு நான், இது ஒரு குற்ற வழக்கு, நீங்கள் தவறாக என்னிடம் வந்து பேசுகிறீர்கள். Anti sexual harassment commitee-ன் அறிக்கையின் நகலை குற்றம் சுமத்தியவர் என்ற முறையில் எனக்கு கொடுங்கள் என்று கூறினேன்.

பிறகு அவர்கள் நிர்வாகத்திடம் போய் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பின்னர் மீண்டும் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டு பேராசிரியர் ராஜராஜனுக்கு விளக்கக் கடிதம் மட்டும் அனுப்பினார்கள், மேலும் அவருக்கு 2 மாதங்கள் முழு சம்பளத்துடன், மேலும் பல சலுகைகளுடன் மருத்துவ விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தது கல்லூரி நிர்வாகம், வேறு எதுவும் நடக்கவில்லை. ஆனால் கூலிப்படையை ஏவி என்னை அடிக்கச் சொன்ன பேராசிரியர் பிரின்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர் மருத்துவ விடுப்பில் இருந்த நாட்களிலும் கூட கல்லூரி தமிழ் துறைக்கு தினமும் வந்து பிரின்ஸ் உடன் சேர்ந்து முகத்திற்கு நேராகவே என்னை விபச்சாரி என்றும், லாட்ஜில் ரூம் போடலாமா என்றும், பல தகாத வார்த்தைகளில் திட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது எனக்கு பெரும் மன உளைச்சலை தந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் துறையைச் சேர்ந்த 2 பேர் கல்லூரி முதல்வரிடம் சொன்னதற்கு, "அவர்கள் அப்படியா சொன்னார்கள், அவர்களை சும்மா விடக்கூடாது" என்று கூறிவிட்டு, தகவல் சொன்ன 2 பேரின் மீதே பல நடவடிக்கைகள் எடுத்தனர். கல்லூரி நிர்வாகத்திற்கும் ராஜராஜன் மற்றும் பிரின்ஸ் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை, ஏன் நிர்வாகம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள், அவர்களை ஏன் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதனிடையே பிரின்ஸ் பலரிடம் "கல்லூரி நிர்வாகம் ராஜராஜன் மீது நடவடிக்கை எடுத்தால், என்னிடம் 20 சாமியார்களின் (fathers) வீடியோ ஆதாரங்கள் உள்ளன, அவற்றை வெளியிட்டு விடுவேன்" என்று கூறிக்கொணடு அலைவதாக கூறுகின்றனர். அதனால் அவர்களுக்குள் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.
மேலும் 2013 ஆகஸ்ட் 7 ஆம் தேதி கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 4 பேரை அனுப்பிய போது பேராசிரியர் பிரின்ஸ் என்னை கல்லூரி வளாகத்திலேயே சந்தித்து, "பேராசிரியர் ராஜராஜனுக்கு மட்டும் எதாவது ஆனால் உன்னை சும்மா விடமாட்டேன், அதற்கு ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டேன்", என்று எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பிரின்ஸ் என்னை மிரட்டியதையும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறினேன். ஆனால் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் ராஜராஜன் 2013 நவம்பர் மாதம் மீண்டும் கல்லூரிக்கு வந்தார். ராஜராஜன் புகார் தொடர்பாக விளக்கம் அளித்துவிட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான் சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை.

இவ்வளவு நடந்த பின்னரும் நிர்வாகம் என்னை வேலையை விட்டு நீக்குவதற்கு பல முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் என்னையும் காரணமில்லாமல் வேலையை விட்டு அனுப்ப முடியாது என்று எனக்கு தெரியும்.

இதுபோன்ற பல காரணங்களால் நான் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். நீதிமனறத்தில் ஒரு ரிட் பெட்டிஷனும் போட்டுள்ளேன். இதற்கான ரிபோர்ட் நகலை ராஜராஜனுக்கும் அனுப்பியுள்ளனர். அதனுடன் எனக்காக சாட்சி சொன்ன 7 பேரின் வாக்குமூலங்களையும் அனுப்பியுள்ளனர்.

சாட்சி சொன்ன 7 பேரையும் மிரட்டும் விதமாக அவர்களது வீடுகளுக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பெண்களை மிரட்டியுள்ளனர். மேலும் சாட்சிகளை கலைக்கும் விதமாக 3 பேருக்கு நீங்கள் எப்படி இவ்வாறு கூறினீர்கள் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது போல எவ்வளவு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். அவர்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.

இதுபோல எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் எனக்கு தற்போது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை ஆணையருக்கு புகார் கொடுத்த பின்னர், புகார் உதவி ஆணையருக்கும், பிறகு அனைத்து அகளிர் காவல்துறைக்க்கு மாற்றப்பட்டு நான் விசாரிக்கப்பட்டேன். இரவு 11 மணி வரை கூட அவர்களது விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு கொடுத்தேன். ஆனாலும் அந்த விசாரணையை அவர்கள் ஆவணப்படுத்தவில்லை.
மீண்டும் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலிருந்து கல்லூரிக்கு வந்து என்னையும், சாட்சிகளையும் விசாரித்தார்கள். ஆனாலும் அவர்கள் இதுவரை எஃப்ஐஆர்(FIR) பதிவு செய்யவில்லை. அதோடல்லாமல் பாலியல் தொந்தரவு நடந்ததா என்பது குறித்து கல்லூரியில் அறிக்கை உள்ளது, அதையும் காவல்துறையினர் நான் பல முறை கூறியும் வாங்கிக் கொள்ளவில்லை.

காவல்துறையினரும் என்னை சமரசம் செய்ய முயற்சிப்பது போல பேசினார்கள். ஏனென்றால் கல்லூரி நிர்வாகம் இந்த பிரச்சனையை மறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று எனக்கு தெரியும். மேலும் அந்த பிரின்ஸ் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆள், கல்லூரி சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரை அடிப்பதற்காக அடியாட்களை அழைத்து வந்தது அனைவருக்கும் தெரியும்.

என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் பல தொந்தரவுகள் காரணமாக 27.01.2014 அன்று மீண்டும் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன்.

நான் ஒரு சாதாரணமாக பெண், தினமும் ரயிலில் வந்து போய் கொண்டிருப்பவர், இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்திற்கு நிறைய பணம் செலவு செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இது ஒரு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மீண்டும் கல்லூரி முதல்வரிடம் அறிக்கையை கேட்டேன். அதற்கு அவர் "நீ ஒரு ரிக்வஸ்ட் லட்டர் கொடு" என்று கூறினார். நானும் கடிதம் அனுப்பினேன், ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் இன்று வரை பதிலோ, அந்த அறிக்கையோ எனக்கு வரவில்லை. இதனால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். பின்னர் மீண்டும் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு அந்த அறிக்கையை கையில் வைத்துக் கொண்டே "நீ நீதிமனறத்திற்கு போ" என்று கூறினார். இப்போது நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.

உண்மையாக கூற வேண்டுமானால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை, அதனுடனே தான் தினமும் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறேன். இந்த பிரச்சனையை முடிப்பதற்காக என்னை என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்ய தயங்க மாட்டார்கள். ஒருவேளை என் மீது ஆசிட் ஊற்றினாலோ, கை, கால்களை உடைத்தாலோ என்னால் என்ன செய்ய முடியும். அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வாயிலாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கல்லூரி முதல்வரும், கல்லூரி செயலரும் நடிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நிறைய காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் லயோலா கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் உந்துதலின் பேரில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று நான் கருதுகிறேன். இதன் காரணமாகவே நான் மீண்டும் காவல் ஆணையரை சந்தித்து "அவர்களை கைது செய்யுங்கள், இந்த புகாரில் என்னை என் இவ்வளவு அலைய விடுகிறீர்கள்" என்று கேட்டுள்ளேன்.

தற்போது இருக்கும் சூழலில் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் கல்லூரியில் உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய புகாரின் வாயிலாகவாவது இது போன்ற பிரச்சனைகளுக்கு லயோலா கல்லூரியில் தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.