1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

தீண்டாமை கொடுமை; சாதி முறைகளின் தோற்றம்

FILE
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தீண்டாமை கொடுமையை எதிர்த்து, தலையில் விறகு கட்டு, அடுப்புடன் 5 கி.மீ. தூரம் நடந்து வந்து தென் மண்டல காவல்துறை ஐ.ஜி.யை சந்தித்து மனு கொடுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் பொன்னொளி கிராமத்தை சேர்ந்தவர் வேட்டைவிளான் (55) விவசாயி. தற்போது மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர், 5 கி.மீ. தூரம் நேற்று தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை கொடுமையை கண்டித்து தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அபய்குமார் சிங்கை சந்தித்து மனு கொடுப்பதற்காக 5 கி.மீ. தூரம் குடும்பத்தினருடன் நடந்தே வந்தார்.

அவர்கள் தலையில், விறகு கட்டு, அடுப்பு மற்றும் தண்ணீர் குடத்தை சுமந்தபடி நடந்து வந்தனர். மாட்டுத்தாவணி அருகே அவர்கள் வந்தபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து ஐ.ஜி. அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் ஐ.ஜி. அபய்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், புதிரை வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த தாங்கள் ஜாதி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஐ.ஜி. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த தீண்டாமை கொடுமைகளின் ஆரம்பம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதத்தின் அடிப்படையாக மக்கள் கருதும் நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது. அவற்றுள் முதன்மையான ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் என்ற பாடலில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. அந்த கதைப்படி, புருஷன் என்று அழைக்கப்பட்ட ஆற்றல் மிகுந்த ஒரு மனிதன் பலியிடப்பட்டான். "கடவுளர்கள் அவனை துண்டு துண்டாக வெட்டினார்கள். பார்பனன் புருஷனுடைய வாய் ஆனான், ரஜன்னியன்(சத்திரியன்) புருஷனுடைய கரங்கள் ஆனான், வைஷியன்(வணிகன்) புருஷனுடைய தொடைகள் ஆனான், சூத்திரன் புருஷனுடைய பாதங்களானான்", என்று அந்த பாடலின் வாயிலாக முதன் முறையாக சமுதாயத்தில் சாதி முறைகள் வித்திடப்பட்டது.

பின்னர் காலத்திற்கு தகுந்தாற் போல சாதி முறைகளை மநுதர்மம் பரிணாம வளர்ச்சி அடையச் செய்தது. தற்போது இருக்கும் வடிவத்திற்கு சாதிய முறைகள் வருவதற்காக பலர் பல நூற்றாண்டுகளாக போராடி வந்துள்ளனர். தற்போதும் சாதியத்தின் இருப்பை நிலை நாட்டுவதற்காக பலர் வெறி கொண்டு செயல்பட்டு வருவது மேலே ஊடகங்களில் வெளியான செய்திகளில் இருந்து தெளிவாக தெரிய வருகிறது.