1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

என்கவுண்டரும் நீதியும்

FILE
மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த செருகுரி ராஜ்குமாரும், பத்திரிக்கையாளர் ஹேம்சந்திர பாண்டே ஆகியோர் காவல் துறையினருடன் நடந்த 'மோதலில்' (என்கவுண்டரில்) கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மிகச் சிறந்த கண் திறப்பு என்றே கூற வேண்டும்.

மாவோயிட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்ததையடுத்து அரசுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த அரசிற்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே அனுசரணையாளராக செயல்பட்ட மக்களவை உறுப்பினர் சுவாமி அக்னிவேஷூம், என்கவுண்டரில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஹேம்சந்திர பாண்டேயின் மனைவி பபிதாவும் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, வழக்கில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களை பார்த்துவிட்டு இவ்வாறு கூறியுள்ளது:

“தனது குழந்தைகளையே கொல்லும் குடியரசு என்ற அவப்பெயர் நமது நாட்டிற்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். அந்த பதில்கள் எங்களுக்குத் திருப்தியளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் மத்தியக் குழு உறுப்பினரான ராஜ்குமார் என்கிற ஆசாத், அவரோடு இருந்ததாக கூறப்படும் பத்திரிக்கையாளர் ஹேம்சந்திர பாண்டே ஆகியோரை மராட்டிய மாநில எல்லையில், அதிலாபாத் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 1,2ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக ஆந்திர காவல் துறை கூறியிருந்தது. ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட அவர்கள் இருவரின் உடலில் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர்கள் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டு தெரியவந்தது. இது மட்டுமின்றி, ஜனநாயக உரிமைகளுக்கான ஒத்துழைப்புக் குழு எனும் அமைப்பு நடத்திய உண்மையறியும் விசாரணையிலும், காவல் துறையினர் கூறியதுபோல் ‘மோதல்’ நடக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

FILE
இதனைத் தொடர்ந்தே அந்த மோதல் படுகொலைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுவாமி அக்னிவேஷ், பபிதா பாண்டே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களுடைய மனுவிற்கு ஆறு வார காலத்தில் பதில் கூறுமாறு ஆந்திர அரசை மட்டுமின்றி, மத்திய அரசிற்கும் தாக்கீது அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டதற்குக் காரணம், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதற்கான ராஜ்குமார் தனது தொடர்பில் இருந்ததை வைத்தே அவர் இருக்குமிடம் கண்டுபிடித்து, அவரை தீர்த்துக்கட்டியுள்ளார்கள் என்று அக்னிவேஷ் கூறியதாகும். எனவே இதில் மத்திய அரசு (உள்துறை அமைச்சகம்) நேர்மையாக நடந்துகொண்டதா என்பது ஆராயப்பட வேண்டியதாகியுள்ளது.

என்கவுண்டர்கள் நமது நாட்டில் நடத்தப்படுவது புதிதல்ல. ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் என்கவுண்டர் மூலம் ஒருவரோ பலரோ தீர்த்துக்கட்டப்படுகிறார்கள். நாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், சமூக விரோதிகள், தேடப்படும் குற்றவாளிகள், ரவுடிகள் என்று காவல் துறையினரால் பலர் வேட்டையாடப்படுகின்றனர். அதற்கு காவல் துறை கூறும் ஒரே காரணம்: ‘அவர்கள் எங்களைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். தற்காப்பிற்காக சுட்டோம். அதில் இறந்துவிட்டார்கள்’ என்பதே. என்கவுண்டர் செய்த இடத்தில் காயம்பட்டதாக ஒரிரு காவலர்கள் அல்லது துணை ஆய்வாளர்கள் கையில் ஒரு கட்டுப்போட்டுக்கொண்டு மருத்துவமனையில் இருப்பது போல் பத்திரிக்கைகளில் படங்கள் வெளியாகும். மோதல் என்பதில் எந்த அளவிற்கு ‘உண்ம’ இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்கள் போட்டுள்ள கட்டிலும் ‘உண்ம’யிருக்கும். இது விவரம் அறிந்த அனைவரும் அறிந்ததே.

ஆனால், நமது நாட்டு மக்களிடையே பொதுவாக (பெரும்பான்மையினரிடம்) ஒரு கருத்து நிலவுகிறது. அது ‘இப்படிப்பட்டவர்களை அப்படித்தான் போட்டுத் தள்ள வேண்டும்’ என்பதே. இது அவ்வாறு போட்டுத்தள்ளப்பட்டவர்களைப் பற்றிய உண்மை (நீதிமன்றத்தில்) வெளிவராமல் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதும், அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் வெளிப்படும் உண்மைகள் அரசியலிலும், சமூகத்திலும் உள்ள பெரியவர்கள் பலரை பாதிக்கும் என்பதாலுமே என்கவுண்டர்கள் நடத்தப்படுகிறது என்பதும் பொது மக்களுக்கு புரியாததே இவ்வாறு கூற காரணமாகும். இது இவ்வாறு கொல்லப்பட்ட சந்தனக் கடத்தில் வீரப்பனுக்கும் பொருந்தும்.

ஒருவர் நக்சலைட் என்பதற்காகவோ அல்லது மாவோயிஸ்ட் என்பதற்காகவோ அல்லது தீவிரவாதி, சமூக விரோதி, ரவுடி என்பதற்காவோ அவர்களை சுட்டுக்கொன்று ‘முடித்தவி’ ஒப்புக்கொண்டால், அது நாளை எந்த ஒரு நிரபராதியையும் அல்லது நடந்த குற்றம் தொடர்பான உண்மையை நீதிமன்றத்தில் கூறக்கூடியவர்களைக் கூட முடிக்க உதவுவதாக ஆகிவிடும்.

இந்த நாட்டில் வாழ்பவர் யாராக இருந்தாலும், அவரவர்களுக்கு தாங்கள் விரும்பும் மதம், வழிபாடு, தொழில் ஆகியவற்றைச் செய்ய எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே அடிப்படையில் தனித்த கொள்கை வகுப்பதற்கும், அதன் வழி நடப்பதற்கும் உரிமையுள்ளது. ஆனால் அவ்வாறு நடப்பது, சமூக அமைப்பை சீர்குலைக்கிறது என்பது குற்றச்சாற்றானால், அதனை நீதிமன்றத்தில் சட்ட ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர, என்கவுண்டர் செய்து தீர்த்துக்கட்டுவது நீதியான தீர்வாகாது. அதனால்தான் என்கவுண்டர் எங்கு நடந்ததோ அந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்றம் வலியுறுத்துகிறது (ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை என்பது வேறு விடயம்).

FILE
ராஜ்குமார் நிலையை பொறுத்தவரை தாங்களே மக்களுக்காக நிற்பதாக (மாவோயிஸ்ட்டுகள்) கூறிகின்றனர். மக்களை காக்கவே தாங்கள் ஆட்சியில் இருப்பதாக அரசியல்வாதிகளும் கூறுகின்றனர். இவர்கள் இருவருமே ஆயுத பாதையில்தான் தங்கள் ஆளுமையை நிலைநிறுத்திக்கொண்டு வருகிறார்கள். ஒருவரை மற்றவர் அழிக்கவே முற்பட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு அடி நீரோட்டமாகவுள்ள பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வருவதில்லை. இதனை நித்திஷ் குமார் போன்ற (ஆயிரக் கணக்கான கோடிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு நாட்டின் வளங்களை விற்காத) முதலமைச்சர்கள் சாதிக்கின்றனர். சட்டீஸ்காரில் இருந்து ஒரிசா வரை நிலை வேறாகவுள்ளது.

ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் கூறும் நாட்டின் பாதுகாப்பும், மாவோயிஸ்ட்டுகள் கூறும் புரட்சியும் மக்களை மையமாகக் கொண்டதே. அதேபோல், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் ஆகியோர் எவ்வாறு இந்த நாட்டு குடிமக்களோ அதே போல், இந்த அரசிற்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கும் மாவோயிஸ்ட்டுகள் அல்லது நக்சலைட்டுகளும் இந்நாட்டு குடிமக்களே. அதனால்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரு்ம ‘தனது குழந்தைகளைக் கொல்லும் குடியரசு என்கிற களங்கம் கூடாது’ என்று கூறுகின்றனர்.

குற்றம் சாற்றப்படும் யாராயினும், நீதிமன்றத்தில் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படும் வரை, அவர்களை நிரபராதிகளாகவே நடத்த வேண்டும் என்றும், மற்ற மனிதர்களுக்குரிய சட்டப்பூர்வமான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமை பிரகடனம் தெரிவிக்கிறது. இதில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு இந்தியா.

எனவே, யாராகயிருந்தாலும், அவர்கள் மீதான குற்றச்சாற்று எத்தன்மையாயினும், நீதிமன்றத்தின் வாயிலான சட்டப்பாதையை மட்டுமே நாட வேண்டும், அதற்கு மாறான எதையும் ஏற்க முடியாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இந்த மனப்பான்மை மாறவில்லையெனில், மோதலில் முடிக்கும் காட்டுமிராண்டித்தனம் இன்றைக்கு அதனை பாராட்டுபவரையே நாளை முடித்துவிடும்.