1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.

FILE
84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

அயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக... என்று தொடங்குகிறது அந்த பாடல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.

ரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா?

மீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்பட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா? எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.

கம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார் திரு.எஸ்.என். நாகராஜன்.