வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

அயல் நாட்டுக் கல்வியும் மாணவர்களின் அவலமும்

அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று தாங்கள் விரும்பிய கல்வியை பெற செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் எதிர்பாரா அவலத்திற்கு மோசமான உதாரணமாக வெளியாகியுள்ளதுதான் டிரை-வாலி பல்கலைக் கழக மோசடி விசா விவகாரமாகும்.
FILE

கலி்ஃபோர்னிய மாகாண தலைநகரான சான் பிரான்சிஸ்கோவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகமே, எஃப் -1 என்கிற கல்விக்கான விசாவை மோசடி வழியில் பெற்றுத் தர உதவியுள்ளது என்பதுதான் பிரச்சனையின் சிகரமாகும். அந்த பல்கலையை அமெரிக்க அரசு இழுத்து மூடி விட்டதால், அதில் படிக்கச் சென்ற 1,500 இந்திய மாணவர்களின் - இவர்களில் பெரும்பாலோர் ஆந்திரத்தில் இருந்து சென்றவர்கள் - நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அயல் நாடுகளுக்கு பணியாற்றச் செல்லும் தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களாகட்டும், உரிய கல்வித் தகுதியுடைய மாணவர்களாகட்டும், அவர்களாகவே விசா முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு சென்று பணியாற்றிடும், கல்வி கற்றிடும் நிலை உள்ளது. இவர்களுக்கு உதவுவதாகக் கூறி பயண முகவர்கள் தான் முன்வருகிறார்கள். அவர்கள் இடையில் புகுந்து செய்யும் குழப்படியால் மலேசியாவிலும், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்காசிய நாடுகளிலும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் பல்லாயிரம். இப்போது மாணவர்களும் அப்படிப்பட்ட சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது.

டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்ற மாணவர்கள் பல இலட்சங்களைக் கொடுத்து விசா பெற்று சென்றது மட்டுமன்றி, அதன் பிறகு அங்கு பணியாற்றிக் கொண்டே (அப்படி ஒரு வாழ்நிலைக் கட்டாயம் உள்ளதால்) படிக்க முற்பட்டு, முறை தவறிய வழியில் பணி அனுமதியும் (Work Permit) பெற்று பல நகரங்களில் சென்று பணியாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முகவரி வழங்கிய முறைகேட்டையும் அந்த பல்கலை செய்துள்ளது.

இப்போது அந்தப் பல்கலை மூடப்பட்டுவிட்டதால், அங்கு படித்துக் கொண்டிருந்த 1,500 இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அது பற்றி அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அறிக்கை பெற்று அளிக்குமாறு அயலுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியத் தூதரக அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் அமெரிக்க அரசுடன் பேசி இந்திய அயலுறவு அமைச்சகத்தால் என்ன சாதிக்க முடியும் என்பது ஐயத்திற்கிடமானதே. ஏற்கனவே விசா கட்டணங்களை அமெரிக்க அரசு தாறுமாறாக உயர்த்தியது குறித்து பேசி முடிவு காண்போம் என்று கூறியது இந்திய அரசு. ஒபாமா கூட இந்தியா வந்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலை இந்த பல்கலை விவகாரத்திலும் நடக்கலாம்.

(இந்த ஒரு விவகாரம் மட்டுமல்ல, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து இரகசியமாக எல்லைத் தாண்டிச் சென்று அமெரிக்காவில் பணிபுரிவோரில் இந்தியர்களும் அதிகரித்து வருகிறார்கள் என்கிற செய்தி ஏற்கனவே வந்துது)

பல்கலைக் கழகங்கள் விவரத் தொகுப்பு அவசியம்

நமது கவலையெல்லாம், இப்படிப்பட்ட மோசடி வழிகளில் மாணவர்கள் கவரப்பட்டு அயல் நாடு செல்வதை இந்திய அரசு தடுத்திட வேண்டும். கல்வி கற்க அயல் நாடு செல்லும் மாணவர்கள் முன்பெல்லாம் அதற்கான அந்நிய செலாவணியைப் பெற இந்திய மைய வங்கியுடன் அனுமதி பெற வேண்டும். இப்போது அப்படிப்பட்ட எந்த அவசியமும் இல்லாததால், அந்நிய செலாவணி எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்று தடையற்ற நிலை காரணமாக, அவர்களின் பயணம் குறித்தோ, படிக்கப்போகும் பல்கலை தன்மை பற்றியோ அரசுக்கு எந்தத் தகவலும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இங்கிருந்து ஒரு மாணவர் அயல் நாட்டிற்குப் படிக்கச் செல்கிறார் என்றால், அவர் புறப்படுவதற்கு முன்னரே, அவரைப் பற்றிய தகவல்களுடனும், அவர் படிக்கச் செல்லும் பல்கலை பற்றிய விவரங்களும் முழுமையாகப் பெறப்பட்டு, அது அந்த நாட்டின் இந்தியத் தூதரகத்திற்கோ அல்லது துணைத் தூதரகத்திற்கோ அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர் எந்த பல்கலையில் சென்று படிக்கச் செல்கிறாரோ அந்தப் பல்கலையின் தரம், தன்மை பற்றிய விவரங்களை அந்நாட்டுத் தூதரகத்திடம் இருந்து பெற்று அயலுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த தகவல் தொகுப்பை (Data Base) வைத்துக்கொண்டு சரிபார்த்த பின்னரே, அயல் நாட்டிற்குச் செல்வதற்கான பயண அனுமதியை அளிக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த எந்த யோசனை கூறப்பட்டாலும் அதனை சாத்தியமில்லை என்று கூறி நிராகரித்திடும் இந்திய அரசு, இந்த யோசனையையும் அவ்வாறே கூறி நிராகரிக்கக் கூடும். அதற்கு நாம் அளிக்கும் பதில் இதுதான்: இந்த நாட்டிற்கு வரவேற்கப்படாத நபர்களைப் பற்றிய விவரங்களை எவ்வாறு உள்துறை அமைச்சகம் உருவாக்கி, அந்த விவரத் தொகுப்பை அயல் நாடுகளில் உள்ள தூதரங்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் அங்கு விசா பெற முயற்சித்தால், அப்படியே நிராகரிக்கிறதோ, அதேபோல், பல்கலைக் கழகங்கள் குறித்த விவர தொகுப்பை தயாரித்து, அதனை அயலுறவு அமைச்சக இணையத்தில் வெளியிட்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் எச்சரிக்கை செய்யலாம்.

மழை பெய்தால் முளைக்கும் காளாண்களைப் போல் அயல் நாடுகளில் பணத்திற்காக நாளும் முளைக்கும் பல்கலைகள் ஏராளம். எனவே அங்கு கல்வி கற்கத் தகுதிபெற்ற பல்கலைகளின் பட்டியலை மட்டுமே கொண்ட ஒரு விவரத் தொகுப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும்.

கல்வியை மேம்படுத்த வேண்டும

இரண்டாவதாக, கல்வித் துறையில் நாளும் ஏற்படும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு் உயர் கல்விப் பல்கலைக் கழகங்களை இந்தியாவின் மைய அரசும், மாநில அரசுகளும் தொடங்கத் தவறியதன் விளைவே, உயர் கல்வி, ஆய்வு என்றாலே மாணவர்கள் அயல் நாடுகளுக்குப் பறந்து செல்வதற்குக் காரணங்களாகும்.

பள்ளிக் கல்வியைக் கூட மறு ஆய்வு செய்து ஒரே தரத்திற்கு உயர்த்தத் தவறிய நாடு இது! வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற - கிளார்க்கை உருவாக்கும் பள்ளிக் கல்வியை இன்றைக்கும் கட்டிக்கொண்டு அழும் ஒரே நாடு இந்தியாவாகவே இருக்கும். இந்தியாவின் எந்த மாநில அரசும் கல்வி மறுசீரமைப்பில் முழுமையானக் கவனம் செலுத்தவில்லை. எனவே பள்ளிக் கல்வியில் மாற்றம் ஏற்படாமல், மேற்படிப்புகளில் எந்த முன்னேற்றமும் காண முடியாது.

நமது நாட்டின் அரசு கல்லூரிகளும், பல்கலைகளும் கூட ஒரு நேரத்தில் தரத்துடன் விளங்கின. இன்றைக்கு பெயர் சொன்னால் மதிக்கக்கூடிய உயர் கல்வி நிலையங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அங்கு இடம் கிடைக்காத நிலையில், அதிக பணம் செலவு செய்து தரமான உயர் கல்வி பெற மாணவர்கள் அயல் நாடுகளுக்குச் செல்கின்றனர். இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், இதர தனியார் கல்லூரிகளில் கற்றுத் தரப்படும் பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி போன்ற அறிவியல் பட்டப்படிப்புகள் கூட பரவலாக இல்லாத அவல நிலை! அரசு கல்லூரிகளில் இப்படிப்பட்ட பயன்படும் கல்வியை அறிமுகப்படுத்தாமல், தனியார் கல்லூரிகளுக்கு வாழ்வளிக்கும் அரசின் (இரகசிய) திட்டம் இது.

தமிழ்நாட்டில் புகழ் பெற்று விளங்கிய பல பல்கலைகள் இன்று பயன்றற புண்ணாக்காகி விட்டன. தேர்வுத் தாள்களை திருத்துவதற்கு ஆளில்லை என்று கூறி, தேர்வு முடிவுகளை தாமதமாக வெளியிடும் கேவல நிலை! ஒரு நேரத்தில் தரமான கல்விக்குத் தமிழ்நாடு என்றிருந்த நிலை, கடந்த 20 ஆண்டுகளில் அபா‘மாற்றமடைந்த’, தரமான கல்வி வேண்டுமா ஓடு தமிழ்நாட்டை விட்டு அயல் நாட்டிற்கு என்ற நிலையாகிவிட்டது. திராவிட கட்சிகளின் அட்டகாசமான சாதனை இது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், சென்னை உட்பட்ட இந்தியாவின் சில நகரங்களில் மட்டுமே இருக்கும் இந்திய தொழில் நுடபக் கழகங்கள், அம்ருதா பல்கலை போன்று சில தனியார் பல்கலைகள். இவைகளை விட்டால், ஓட வேண்டியதுதான் வெளிநாட்டிற்கு. இதில் கவலை கொள்ளத்தக்க ஒரு நிலை என்னவெனில், அறிவியல் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்னர் செய்ய வேண்டிய தனித்த ஆய்விற்குக் கூட தரமான அறிவியல் கூடங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலை.

இப்படிப்பட்ட நிலையில், முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற மாணவர் மேலாய்வுப் பட்டம் பெற வெளிநாட்டிற்குத்தானே ஓட வேண்டியது உள்ளது? இது நாட்டிற்கு அவமானமில்லையா? அவர்கள் அங்கு சென்று, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கிடைக்கும் வசதிகளையும், வழிகாட்டுதல்களையும் கொண்டு உயர் தகுதிகளைப் பெற்று, கடுமையாக உழைத்து, பிறகு உலகம் அதிரும் ஆய்வுகளை நிகழ்த்தி விருதுகளைப் பெறும்போது மட்டும், ‘அவர் இந்தியர’ என்றால் தகுமா? அவர்களை உருவாக்கியது இந்த நாடா? பெருமை மட்டும் நமக்கு வேண்டும்?

இந்த நிலை மாற வேண்டும். கல்வியை தனியாருக்கும், அயல் நாட்டு பல்கலைக் கழகங்களை இங்கு அழைத்தும் தாரை வார்த்திடும் நிலை மாற வேண்டும். ஒரு நாடு முழுமையான முன்னேற்றம் காண வேண்டுமெனில் தனது தொழில் நுட்ப, அறிவியல் தகுதியை உயர்த்திக்கொண்டே செல்ல வேண்டும். அதனை அரசு தன் தனித்த சொத்தாக கருதி வளர்த்திட வேண்டும். புதிய பொருளாதாரக் கொள்கை போல், உள்நாட்டு, அயல் நாட்டு முதலைகள் வந்து கொள்ளையடிப்பதற்கான மற்றொருத் துறையாக கல்வியும் ஆகி விட அனுமதிக்கக் கூடாது.

இந்த வழியில் சென்று சாதிப்பதை இன்றுள்ள எந்தத் தலைவரும் விரும்பார். இன்றுள்ள தலைவர்கள் இண்டிபெண்டாக வளர்ந்த இந்த நாட்டை நாளுக்கு நாள் டிபென்டெண்டாக மாற்றிக்கொண்டிருப்பவர்கள். எனவே மக்களே அப்படிப்பட்ட தலைமையை உருவாக்க வேண்டும்.

அதைச் செய்யவில்லையெனில் இந்தியாவில் கல்வி செத்துவிடும்.