1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:16 IST)

நீங்கள் வயக்காட்டு பொம்மைகளும் அல்ல, கொத்தடிமை பொம்மைகளும் அல்ல

நீங்கள் வயக்காட்டு பொம்மைகளும் அல்ல, கொத்தடிமை பொம்மைகளும் அல்ல

மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களே! நீங்கள் வயக்காட்டு பொம்மைகளும் அல்ல, கொத்தடிமை பொம்மைகளும் அல்ல, நீங்கள் எங்களின் உயர்வான பிரதிநிதிகள். நீங்கள் அமர்ந்து இருக்கும் இந்த சபை பலசிறப்புகளை உடையது. இந்திய பாராளுமன்றத்திற்கே வழிகாட்டியாக பல அற்புதமான விவாதங்கள் நடைபெற்ற இடம்.


 


காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும், மக்கள்பிரச்சனைக்காக இருபெரும் துருவங்களாக நின்று விவாதித்தபோதும், தங்களின் கண்ணியத்தை மட்டும் அல்லாமல் சபையின் கண்ணியத்தையும் கட்டிகாத்த இடம். ஜனநாயகத்தில் எங்களின் குரலை ஒலிப்பததற்காக அனுப்பப்பட்ட எங்களின் வேலைக்காரர்கள் நீங்கள். உங்களின் எஜமானர்கள் நாங்கள். ஒரு எஜமானுக்கு பலவேலைக்காரர்கள் இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தில் ஒருவினோதம், இங்குலட்சக்கணக்கான எஜமானர்களுக்கு ஒரேவேலைக்காரன். அது வேறுயாரும் அல்ல, நீங்கள்தான்.

உங்களில் சிலருக்குதான் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மகளிருக்கான சொத்துரிமை, அரசின் ரகசிய ஆவணகாப்பு மசோதா என்ற வரலாறு சொல்லும் பலமசோதாக்கள் நிறைவேறிய இடம், நீங்கள் அமர்ந்திருக்கும் இடம். வாக்களித்து நாங்கள் உங்களை அனுப்பி இருப்பதற்கான காரணம் புரியாமல் இருபெரும் திராவிடகட்சிகளும் ஒருவர்மீது ஒருவர் சேற்றைவாரி பூசிக்கொள்கிறீர்கள் .தெருவோரம் நடக்கும் குழாயடி சண்டையை நீங்கள் விஞ்சிவிட்டீர்கள். உங்களின் தலைவர்களான முதலமைச்சருக்கும் ,எதிர்க்கட்சி தலைவருக்கும் சபையை திறம்படநடத்துவதில் பெரும்பங்கு உள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே

கடந்த காலங்களில் நீங்கள் சில கசப்பான அனுபவங்களை இந்தமன்றத்தில் பெற்று இருக்கலாம். மக்கள் உங்கள்மீது மட்டுமே நம்பிக்கை வைத்து (உங்கள் அமைச்சர்கள் மீது அல்ல) இரண்டாம்முறை வாய்ப்புதந்து இருக்கிறார்கள். மக்கள்பார்க்கும் ஒரு சபையிலே எதிர்கட்சிதலைவர்களை தள்ளுவண்டி என்றும் தண்ணிவண்டி என்றும் உங்கள் கட்சிஉறுப்பினர்கள் பேசுவதும், அதை நீங்கள் கேட்டு குலுங்கி குலுங்கி சிரிப்பதும் உங்களுக்கும், உங்களின் பதவிக்கும், சபைக்கும், கண்ணியமானது அல்ல. அதற்காக முதலமைச்சர் சிரிக்கவே கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. முன்னாள் மேயர் சுப்ரமணியன் சட்டசபை தலைவர் அவர்களை, மாண்புமிகு மேயர் அவர்களே என்று அழைத்தபோது நீங்கள் குறுக்கிட்டு பேசி சிரித்தது மிகவும் அழகாக இருந்தது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் பேசுவது எப்படி? என்று அறிவுரை பகிர்ந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதல்வரை தொடர்ச்சியாக புகழ்வது சபைக்கு நல்லது அல்ல.

முதலமைச்சருக்கு தெரியாத இலக்கியங்கள் இல்லை. கவிசக்கரவர்த்தி கம்பன் தன்னை ஆதரித்த சடையப்பவள்ளலை தனதுகாவியத்தில் ஆயிரம்வரிகளுக்கு ஒருமுறைமட்டும்தான் நினைவுகூறுகிறான். கம்பன் நினைத்து இருந்தால் பத்து, நூறு வரிகளுக்கு ஒருமுறைகூட சடையப்பவள்ளலை நினைவு கூறி இருக்கமுடியும். ஆனால் கம்பனுக்கு தெரியும் அது ராமகாவியத்தை சிதைத்துவிடும் என்று. கம்பனைபோல நீங்கள் ஏன் சட்டமன்ற காவியத்தை உணரவில்லை முதலமைச்சர் அவர்களே.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.......

மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்களே

ஆளுங்கட்சி உறுப்பினர் வயக்காட்டுபொம்மைகள் என்று அழைத்தது தவறுதான். அதை நாங்கள் நியாப்படுத்தவில்லை. அதற்காக சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று விமர்சனம் செய்வது உங்களுக்கும், உங்களின்பதவிக்கும், சபைக்கும் கண்ணியமானது அல்ல. வரும்காலங்களில் இதைவிட கடுமையான விமர்சனங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரலாம். வாதங்களை உங்களின் தகப்பனார் போல சிறப்பாக எதிர்கொள்ளுங்கள். திமுக என்றால் வெளிநடப்புக் கட்சி என்ற இமேஜை உருவாக்கிவிடாதீர்கள்.

ஒருவேளை உங்கள் தகப்பனார் எதிர்க்கட்சி தலைவராக இருந்துஇருந்தால், வயக்காட்டு பொம்மைகள் விமர்சனத்தை எவ்வாறு எதிர்கொண்டு இருப்பார் ஆனால், ஆம் நாங்கள் வயக்காட்டு பொம்மைகள்தான். தமிழ்நாட்டை திருடர்களிடம் இருந்து காக்கும் வயக்காட்டுபொம்மைகள் நாங்கள். தமிழை காக்கும் வயக்காட்டு பொம்மைகள் நாங்கள், மதவாதத்தை விரட்டும் வயக்காட்டு பொம்மைகள் நாங்கள், எனபேசி இருப்பார். 

அண்ணா முதலைமைச்சராக இருந்தபோது உங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது என்ற கடுமையான விமர்சனங்களை கூட எளிதாக சிறப்பாக எதிர்கொண்டார். அவரின் பள்ளியில் பயின்ற உங்கள் தகப்பனரின் சிறப்பு முள்மாலைகளை ரோசாமாலைகளாக ஏற்பதுதான். ஆளுங்கட்சி உறுப்பினர்களைவிட அதிக அனுபவங்களை உடைய ஜாபவான்களை பெற்று இருக்கிறீர்கள். ஜாபவான்கள் உடற்கூறுமொழிகளால் சபாநாயகரை மிரட்டுவதும் சபைக்கு கண்ணியமானது அல்ல.

மாண்புமிகு அமைச்சர் தங்கையா அவர்களே

நீங்கள் அடிமைகள் அல்ல. அம்மாவின் அடிமைகள் என உங்களை மார்தட்ட உகந்த இடம் சட்டமன்றம் அல்ல. அதற்கு உங்களின் கட்சியின் செயற்குழு, பொதுகுழு இருக்கிறது. அங்கு சென்று சொல்லுங்கள் நாங்கள் அம்மாவின் அடிமைகள் என்று. நீங்கள் வளைந்து, குனிந்து, காலில் விழுந்து, ஓட்டுகேட்ட சாமானியன் சொல்லுகிறேன். நீங்கள் மட்டும் அல்ல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர், எதிர்க்கட்சிதலைவர் உட்பட அனைவரும் சாமானியர்களின் அடிமைகள் அல்ல, சேவகர்கள்.

இரா .காஜாபந்தாநவாஸ் ,
பேராசிரியர்









வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்