வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By ஜனநாயக காவலன்
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2015 (12:57 IST)

ஹெல்மெட் நன்மையா? .. தீமையா?

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திடீர் உத்தரவு தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. இன்றளவும் அந்த  பரபரப்பும் அதுபற்றிய விவாதமும் அடங்கியபாடில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. வழக்கம் போல் கடைசி நேரத்தில் உத்தரவு திரும்ப பெறப்படும் என நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் ஜூலை ஒன்றாம் தேதியை நெருங்க நெருங்க ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. விற்பனை கொடிகட்டியது. எது தரமானது, ஐஎஸ்ஐ முத்திரை உண்மையானதா , போலியா என்பதை ஆராய நேரமில்லாமல் போனது. ஒரு வருட இலக்கை மூன்றே நாளில் எட்டி கல்லா கட்டினார்கள் ஹெல்மெட் வியாபாரிகள். சென்னை அண்ணா சாலையில் ஹெல்மெட் கடைகள் முன் நின்ற வரிசையால் ஜூன் 30ம் தேதி போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஹெல்மெட் அணிவது நல்லதா, கெட்டதா… தலைக்கவசம் தலையை காக்குமா, உடலைக் கெடுக்குமா என அத்தனை மீடியாக்களிலும் மணிக்கணக்கில் விவாதம்…

இத்தனையும் தாண்டி வாகனத்தில் பின்னால் இருப்பவர்களும் குழந்தைகளும் கூட ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அனைத்து தரப்பினரையும் இன்னலுக்குள்ளாக்கியது. காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தாய்மார்கள் படும் அவஸ்தையை சொல்லி மாளாது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வாகனத்தில் சென்றால் ஹெல்மெட்டுகளை பராமரிப்பதே பெரிய சிரமமாகி விடுகிறது.

இதிலும் அந்த இடத்திலேயே அபராதம் விதிப்பது கிடையாது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுநர் உரிமம் வாகனத்தின் ஆவணம் அணைத்தையும் பறிமுதல் செய்து விடுகிறார்கள் காவல்துறையினர்., பின்னர் நீதிமன்றத்தில் சென்று அபராதம் செலுத்தி அவற்றை திரும்ப பெற ஒரு முழு நாளை செலவிட வேண்டிய அவலம். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே இருக்கும் உத்தரவு தான். நடைமுறையில் அது கடைப்பிடிக்க முடியாமல் இருந்தது. இப்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவும் நீடிக்குமா அல்லது காலப்போக்கில் மாறிவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில்,


பாலமுருகன் – அக்வாரியம் வைத்திருப்பவர்

ஹெல்மெட் அணிவது நல்லது தான். ஆனால் இப்படி கண்டிப்பான உத்தரவு என்பது அனைவரையும் சிரமத்திற்குள்ளாக்க கூடியது. கிராமங்களில் வயலுக்குச் செல்பவர்கள் கூட இப்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. வேலைகளுக்குச் செல்வோர் இருசக்கர வாகனம் தேவைதானா என சிந்திக்க வைக்கும் அளவிற்கு இன்னல்கள் . சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியது அவசியம்

ரேகா – காப்பீட்டு நிறுவன அதிகாரி

ஹெல்மெட் அணிவது நல்லது தான். நான் எப்போதும் ஹெல்மெட் அணிகிறேன். ஆனால் இரவு நேரங்களில் அசௌகரியமாகத்தான் இருக்கிறது.  குறிப்பாக நீண்ட நேரம் அணிந்தால் சைனஸ் பிரச்சனை ஏற்படும் என்பது கவலைக்குரியது. பெண்கள் , குழந்தைகளுக்கு சலுகை வழங்கப்பட வேண்டியது கட்டாயம்.

டாக்டர் பா.சீனிவாசன் – திருவொற்றியூர்

ஹெல்மெட் அணிவது தலைக்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். அது தலைமுடி கொட்டுவதற்கு வழி வகுக்கும். நீண்ட தூரம் பயணிக்கும்போது வேகமாகச் செல்ல வேண்டியிருப்பதால் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிவது சரிதான். ஆனால் சென்னை மாநகரம் போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் வாகனங்கள் பெரும்பாலான நேரம் ஊர்ந்து செல்லும் நிலை தான் உள்ளது. அப்போது ஹெல்மெட் அணிவதை விட அணியாமல் செல்வதே விபத்துக்களை தவிர்க்க உதவும் என்பது என் கருத்து என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.