வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : வெள்ளி, 8 மே 2015 (17:33 IST)

ஜெயலலிதாவுக்கு எதிரான கூட்டணி: விஜயகாந்த் முயற்சி பலிக்குமா?

தமிழகம் சட்டமன்றத் தேர்தலை இன்னும் ஒரு வருடத்துக்குள் சந்திக்க உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தமிழகத்தில் உள்ள ஒவ்வோருவரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.
 

 
தமிழக முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதா, முக ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உள்ளனர்.
 
இருப்பினும், கடந்த, 2011 தேர்தலில் ஜெயலலிதா, தேமுதிக, இரண்டு இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மற்றும் ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகளோடு தேர்தலை சந்தித்தார்.
 
திமுகவோ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கட்சி, மற்றும் முஸ்லீம் லீக் கட்சியோடு தேர்தலை எதிர்கொண்டது.
 
இதில், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு அருதிப் பெரும்பான்மையை தந்தது. திமுக மீது இருந்த கோபம் காரணமாக மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தர மறுத்து விட்டனர். 29 எம்எல்ஏக்களை  பெற்று, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
 
தமிழக சட்டப் மன்ற உறுப்பினர்களில், தேமுதிகவைச் சேர்ந்த 8 பேரை கட்சித் தாவவைத்தார் ஜெயலலிதா. இதனால் கடும் கோபத்தில் உள்ள விஜயகாந்த், வரும் தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிர் அணியில் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக பெற்ற வெற்றி என்பது அசுர வெற்றி என்றே வர்ணிக்கப்படுகின்றது. எந்தக் கட்சியோடும் கூட்டணி இன்றி தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றது. 44 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை அதிமுக பெற்றது.
 
இது அதிமுகவின் தனிப்பட்ட செல்வாக்கைக் காட்டுகிறது என்பதைவிட ஜெயலலிதாவின் துணிச்சலான முடிவுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், டெல்லியில், உச்ச நீதிமன்ற மூன்று பேர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்குப் பிறகு, தமிழகத்தில் நிலைமை சூழ்நிலை மாறியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
 
மேலும் அடுத்த பக்கம்..

மேலும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் எப்படிப்பட்ட நிலையில் வெளிவந்தாலும், தமிழகத்திற்கு, விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரலாம் என்ற நிலை உள்ளது.
 
இந்நிலையில், அதிமுக தவிர மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு இப்போது முதலே அச்சாரம் போட்டு வருகின்றனர்.
 
இதனால் தான், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாக தலைவர் ஜி.கே.வாசன் போன்ற பல முக்கியத் தலைவர்களை விஜயகாந்த் நேரில் சென்று சந்தித்தார்.
 
குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து, தனது தலைமையில், டெல்லியில் தமிழக முக்கிய பிரச்சனைகள் 5 குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு கொடுத்து, தனது வலிமையை காட்டினார்.
 
இன்றைய நிலையில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளோ அல்லது மக்கள் நலப்பணிகளோ நடைபெறவில்லை. கோவில்களில் பூஜை செய்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் போன்ற பணிகள் மட்டுமே நடக்கின்றன. எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாக எந்திரம் செயலிழந்து விட்டது என்று திமுக, தேமுதிக, பாமக மற்றும் காங்கிரஸ் போன்ற பெரும்பலான கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
 
அதே வேளையில், திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே அறிக்கை மூலம் மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே, பாமகவுக்கும், தேமுதிகவுக்கும் கெமிஸ்ட்ரி சரியில்லாமல் போனதால், மீண்டும் இக்கட்சிகள் கை கோர்க்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது.
 
பாஜக தலைமையில் மீண்டும் கூட்டணி ஏற்படும் பட்சத்தில், பாமக மற்றும் தேமுதிக இணைந்து போட்டியிடுவது சாத்தியம் இல்லை என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
 
முக ஸ்டாலின், விஜயகாந்த் மற்றும் அன்புமணி ஆகிய மூவருமே, முதல்வர் கனவில் இருப்பதால், இவர்களை குறிவைத்தே அரசியல் காய் நகர்த்துகள் தமிழகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்நிலையில், தமிழக மக்களின் பொது மனநிலையை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி  தொலைக்காட்சி சர்வே செய்த போது, ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக 33 சதவிகிதமும், திமுகவுக்கு ஆதரவாக 49 சதவிகிதமும் வாக்குகள் கிடைத்துள்ளது.
 
தமிழகத்தில் 1995 - 96 ஆம் ஆண்டுகளில் அதிமுக அரசு மீது நிலவிய அதே கோபம்,  தற்போது மக்களிடையே இருப்பதாக தொலைக்காட்சி சர்வே காட்டுவதாகக் கருதப்படுகிறது. அந்த கோபம் எதிர்க்கட்சிகளுக்கு கை கொடுக்குமா என தெரியவில்லை.
 
மேலும், இந்த கோபத்தை முன்வைத்து திமுக, தமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவதில் விஜயகாந்த் வெல்வாரா என்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.