வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (12:50 IST)

சூர்யா சார் கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க

20 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கை , 35க்கும்  மேற்பட்ட திரைப்படங்கள், அகரம் அறக்கட்டளை மூலம் எண்ணில் அடங்காத உதவிகள் செய்து வருபவர் என்றும் இளமை மாறாத மார்க்கண்டேயன் திரு.சிவகுமார் அவர்களின் புதல்வர் நடிகர் சூர்யா . இவர் தனது சமீபத்திய பேச்சில் சில காவலர்கள் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என்று பேசி இருக்கிறார்.

 
சிங்கம் 3 படம் ப்ரோமோஷனுக்காக பேசினாரா என்று தெரியவில்லை. சமீபத்திய  
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஆறாத வடுக்கள் இளைஞர்கள் மத்தியில் உள்ள போது திரு. சூர்யா அவர்களின் காவல்துறைப் பற்றிய பேச்சு, சிங்கம் 3 பட ரிலீஸ், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று மூன்றுப்  புள்ளிகளையும் ஓர் முக்கோணம் கொண்டு  இணைத்து நடிகர் சூர்யாவிற்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.
 
கேள்வி எண் 1
 
இளைஞர்களால், படித்தவர்களால், பண்பாளர்களால் முன் எடுத்துச் செல்லப்பட்ட ஜல்லிகட்டுப் போராட்டம் பல படிப்பினைகளை இளைஞர்களுக்கு தந்து உள்ளது. அதில் ஒன்று சினிமா நடிகர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைப்பது. இரண்டு அவர்களுக்கான இடத்தை அவர்களின் செயல் மற்றும் பேச்சு ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிப்பது. பேச்சும் நிறைவாக பேசுவது சிறப்பல்ல, இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவதே சிறப்பு. அதை ஏன் நீங்கள் அறியவில்லை.
 
கேள்வி எண் 2
 
சில காவலர்கள் செய்த தவறை மறக்க சொல்கிறீர்கள். ஒட்டு மொத்த காவல்துறையின் positive ஆன விஷயங்களை எடுத்துச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் சில காவலர்கள்செய்த தவறை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?
 
கேள்வி எண்  3
 
நம் தமிழக காவல்துறைக்கு நீங்கள் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையான நன் நடத்தை சான்றிதழ் தர விரும்புகிறீர்களா?அதை தர நீங்கள் யார்?
 
கேள்வி எண்  4
 
நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யுமாம் மழை. அது போல் அல்லாமல் நல்லோர் பலரின் பொருட்டு நடுக்குப்பதிலும், ரூதர் போர்டு காலனியிலும் பெய்ததாம் அமில மழை. சிங்கம் 3 ஷூட்டிங்  பிஸி, இருந்தாலும் டிவி , செய்தி எல்லாம் பார்க்கிறீர்களா, இல்லையா?
 
கேள்வி எண் 5
 
அது என்ன சில, பல காவல்துறையினர்? எல்லா காவல்துறையினரும் பணியில் சேரும் போது விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் என்றே உறுதி மொழி எடுக்கிறார்கள். நீங்கள் எல்லாம் நற்சான்றிதழ் தர வேண்டிய நிலையில் தான் நம் காவல் துறை உள்ளதா?
 
கேள்வி எண் 6
 
சூர்யா சார்! டிவி பாத்தீங்களா?அடடா என்ன அழகு! ஆட்டோவுக்கு தீ வைக்கிற அழகு! அடடா என்ன அழகு! குடிசைக்கு தீ வைக்கிற அழகு! அதையெல்லாம் பார்த்த பிறகு தான் சில பல என்ற வார்த்தையை உபயோகம் செய்கிறீர்களா?சார், நீங்க சொல்றது ஒரு கிளாஸ் பாலில் ஒரு சொட்டு விஷம் தான் உள்ளது. அதனால் அதை பருகலாம் என்று சொல்வது போல் உள்ளது.
 
நடிகர் சூர்யா அவர்களே நீங்கள் இன்னும் நீங்கள் நிறைய காலம் தமிழ் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும். பேசும் போது  அளவாக, நிறைவாக பேச வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். காவல் துறையை பாராட்ட வேறு ஒரு தருணங்கள் இருக்கிறது. அதற்கு சமயம் இது இல்லை.
 
இரா .காஜா பந்தா நவாஸ்,
பேராசிரியர்