வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (12:19 IST)

சசிகலாவிற்கும் ஸ்டாலினுக்கும் பட்டாபிசேகமும் - பாஜகவின் வயிற்று எரிச்சலும்

ஒரு அரண்மனையில் சகல வசதிகளையும், ஐஸ்வர்யங்களையும் பெற்று எஜமானி ஒருவர் வசித்து வந்தார். எஜமானி இடும் சில தங்க நாணயங்களைப் பெற சில உண்டகட்டிகள் எப்போதும் அவர் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். எஜமானி உண்டகட்டிகளை எங்கு வைக்க வேண்டுமோ? அங்கு சரியாக வைத்து இருந்தார். இந்த உண்டகட்டிகளுக்கு அந்த எஜமானியின் மீது பயம் கலந்த மரியாதை இருந்தது.  



எஜமானி ஒரு நாள் திடீர் என்று மரணம் அடைத்து விட்டார். அந்த அரண்மனைக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் தங்களின் புதிய எஜமானியை தேர்வு செய்ய முயலும் போது, இந்த உண்டகட்டிகள் இல்லை! இல்லை! இந்த அரண்மனை எங்களுக்குதான் சொந்தமானது, இதன் வருங்கால எஜமானர்கள் நாங்கள்தான் என்று அரண்மனையின் சாவியை எடுக்க முயல்கிறார்கள். அதுப்போலதான் ஜெயலலிதாவும், தமிழக பிஜேபியும். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழக பிஜேபியின் பேச்சு மொழிகள் நிறைய மாறி இருக்கிறது.
 
டக்ளஸும் ஓனரும்
 
நாங்கள் மூன்றாம் அணி அல்ல, நாங்கள் தான் முதல் அணி என்கிறார் பொன்னார். எங்களால் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியும் என்கிறார் குமரி ஆனந்தனின் தவப் புதல்வி. கட்சியின் பொது செயலரும், அரசின் தலைவரும் ஒரே நபர் இருக்கக் கூடாது என்கிறார் முரளிதர ராவ். ராம் மோகன் ராவ்விற்கு  பேச்சுப் பயிற்சிக் கொடுத்தது யார்? என்று கேட்கிறார் ஒரு மத்திய அமைச்சர். சசிகலா மற்றும் திராவிடக் கட்சிகள் மீது ஏன் இவர்களுக்கு இந்த வெறுப்பு.  
 
மௌன சாட்சிகள்
 
சசிகலா, பினாமி ராணி என்றால் இது வரை அதை வேடிக்கை பார்த்த நீங்களும் உங்களின் மத்திய தலைமையும்  ஊழலின் சாட்சியாளர்களா என்ன? ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகங்கள் எழுப்பும் நீங்கள், உங்களின் மத்திய தலைமை அனுப்பிய எய்ம்ஸ் டாக்டர்களிடம் கேட்கலாமே? யாரை மிரட்டி பணிய வைக்க ஜாலம் செய்கிறீர்கள்?
 
மெத்த படித்த மேதாவி ஆடிட்டர் குரு மூர்த்தி
 
அதிமுக தலைமைக்கு சசிகலா தகுதி இல்லாதவர், ஸ்டாலினால் கருணாநிதியின் இடத்தை நிரப்ப முடியுமா? என்று பேசும் இந்த மெத்த படித்த மேதாவி யார்? யார் தகுதியானவர்கள்? யார் இடத்தை யார் நிரப்ப முடியும்? என்றெல்லாம் அடுத்த கட்சி பற்றிப்  தலையங்கம் எழுத யார் நீங்கள்? துக்ளக் தலைமைக்கு முதலில் நீங்கள் தகுதி ஆனவரா என்ன? காலம் சென்ற சோவின் இடத்தை நிரப்ப உங்களால் முடியுமா என்ன? யாருக்கு என்ன பதவி? அவர்கள் எப்போது அதை அடைவார்கள்? என்பதை எல்லாம் காலமும், சூழ்நிலைகளும், அவர் திறமைகளும் முடிவு செய்கிறது. பிறகு உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல்?
     
2014 பாராளுமன்ற தேர்தலின் போது பிஜேபி சார்பில் நீலகிரியில் தாக்கல் செய்யப்பட்ட உங்களின் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற மர்மம் பற்றி துக்ளக்கில் தலையங்கம் எழுதலாமே? உங்களுக்கு எங்களின் பணிவான வேண்டுகோள், துக்ளக்கில் இனி தலையங்கம் எழுதும்போது தயிர் சாதம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் எழுத வேண்டாம். கறி சாப்பிடுபவர்களுக்கும் சேர்த்து எழுதவும், ஏனெனில்கறி சாப்பிடுபவர்களும் (நான் உட்பட) துக்ளக் படிக்கிறோம்.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்