செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 16 மார்ச் 2016 (15:30 IST)

சாராய மல்லையாக்களும்... சாதாரண விவசாயிகளும்...

தஞ்சை மாவட்டம் சோழகன்குடிகாடு விவசாயி பாலனை காவல்துறையினர் தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்ததும், அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் விவசாயி அழகரை நிதி நிறுவன அடியாட்கள் தரக்குறைவாகப் பேசி டிராக்டரை பறிமுதல் செய்ததும், அதைத் தொடர்ந்து அழகர் தற்கொலையும் தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
வெளியில் தெரிந்தது இரண்டு சம்பவங்கள். வெளி உலகத்துக்கே தெரியாமல் அன்றாடம் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் உள்ளன. தனியார் நிதி நிறுவனங்களின் அட்டகாசம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
 
கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து கடனிலே சாகும் விவசாயி:
 
கடன் பெறுகிறவரை ஏஜெண்டுகள் மூலம் கனிவாக பேசி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, கடன் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். கடன் வலையில் ஒருமுறை சிக்கிவிட்டால் மரணம் வரை மீளவே முடியாத நிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். உத்தரவாதமில்லாத, இயற்கையை நம்பி செய்யப்படும் விவசாயத்தில் பருவகால வருமானம் மட்டுமே உள்ள தொழிலில் எப்படி தவணை தவறாமல் கடனை கட்ட முடியும்?
 
முக்கால்வாசி பணத்தையும் திரும்ப கட்டி சொத்தையும் இழந்தவர்கள் தான் அதிகம். மானம், மரியாதைக்கு பயந்து வெளியில் சொல்லாமல் ‘தலைவிதி’யே என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். “இந்திய விவசாயி கடனிலே பிறந்து,கடனிலே வாழ்ந்து கடனிலே செத்துக்கொண்டிருக்கிறான்” இது பிரிட்டிஷ் ஆட்சியில் 1928ஆம் ஆண்டு ராயல் கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டது. ஏறத்தாழ 90 ஆண்டுகள் ஆன பிறகும் விவசாயிகள் நிலைமையில் மாற்றமில்லை.
 
இதை வெளிப்படுத்துவதுதான் நாடு முழுவதும் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் தற்கொலை. இதற்கு மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள்தான் காரணம் என்பது சொல்லாமலேயே விளங்கும். கடன் பிரச்சனை என்பது கணக்குப் புத்தகங்கள் சம்பந்தப்பட்டது அல்ல.
 
அது லட்சோப லட்சம் மக்களின் வாழ்க்கை தொடர்புடையதாகும். அடிப்படையில் அது அரசியல் ரீதியானது. இங்கிலாந்தின் பொருளாதார மேதைஜான் மேனார்டு கெயின்ஸ் என்பவர் சொன்னது “1000 பவுண்ட் கடன் வாங்கியிருந்தால் நீ வங்கியின் தயவில் இருப்பாய். 10 லட்சம் பவுண்ட் கடன் வாங்கியிருந்தால் வங்கி உன் தயவில் இருக்கும்”.
 
இது எவ்வளவு பொருத்தமானது என்பதற்கு 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவெளிநாட்டிற்கு ஓடிவிட்ட மல்லையாவிடம் கடனை வசூலிக்க வங்கிகள் அவர் வருகைக்காக தவம் கிடப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். 4 லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளூரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயி பாலனை காவல்துறையையும், அடியாட்களையும் ஏவி தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்கின்றனர்.
 
தமிழ்நாட்டில் தனியார் நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் பெருகிவிட்டன. கோட்டாக் மஹேந்திரா பைனான்ஸ், சோழமண்டலம் பைனான்ஸ், கொசமற்றம் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் என பட்டியல் நீள்கிறது. கிராமங்களில் வர்த்தகம் லாபகரமாக நடக்கவில்லை என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் தங்களின் கிளைகளை தொடர்ந்து மூடிக்கொண்டுள்ளன.
 
அத்தகைய கிராமங்களை குறி வைத்துத்தான் இந்த தனியார் நிதி நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை துவக்கி கொள்கை லாபமடிக்கின்றன. நகைக்கடன், வாகனக்கடன், வியாபாரம் செய்யக்கடன், குடும்பத்தின் பல்வேறு தேவைகளுக்கு தனிநபர் கடன் என்று கந்துவட்டிக்கு பணம் கொடுக்கின்றனர்.
 
தனியார் கடன் வசூலிக்க காவல்துறைக்கு என்ன அக்கறை?:
 
பாலன் டிராக்டர் வாங்க மஹேந்திரா கோட்டாக் பைனான்சில் ரூ.3,80,000 கடன் வாங்கியிருக்கிறார். இதை விடக் கூடுதலாகவே பணத்தை திருப்பிக் கட்டிய பிறகும், இரண்டு தவணை பாக்கிகட்டவில்லை என்று தான் நிதி நிறுவனத்தினர், காவல்துறையினர் மற்றும் தனது அடியாட்களை ஏவி விவசாயி பாலனை பொது இடத்தில் தாக்கி, வலுக்கட்டாயமாக டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
 
சட்டவிரோதமான காரியத்தை காவல்துறையினரும் சேர்ந்தே செய்துள்ளனர். தனியார் கடன் சம்பந்தப்பட்ட பணத்தை வசூலித்து தருவதில் காவல்துறைக்கு என்ன அவ்வளவு அக்கறை? பணம் வரவு - செலவு சம்பந்தப்பட்ட விசயத்தில் நேரடியாக காவல்துறை தலையிட்டதற்கு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த லஞ்சப் பணம் தான் காரணம் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பு இல்லை.
 
இதே போல் தான் சோழமண்டலம் பைனான்ஸ்சை சேர்ந்த அடியாட்கள், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த அழகர் என்ற விவசாயியையும், அவருடைய மனைவியையும் அவமானப்படுத்தும் வகையில் பேசி டிராக்டரை பறிமுதல் செய்ததன் விளைவாகவே, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கடன் பெற்றது ரூ.7 லட்சம். 5.10 லட்ச ரூபாயை திருப்பிக் கட்டியுள்ளார்.
 
தனியாரிடம் கடன் வாங்குவது ஏன்?:
 
ஏன் இவர்கள் தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள்? ஏனென்றால், கடன் கோருகிற விவசாயிகள் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன் கொடுப்பதில்லை. அவர்கள் இலக்கு வைத்திருக்கிறார்கள். அதற்குள்தான் கடன் வழங்கப்படும்.
 
உதாரணத்திற்கு 2014-15ல் தமிழ்நாட்டில் கூட்டுறவுவங்கிகள் மூலம் 9.72 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன் ரூ.4955 கோடி என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், உண்மையில் கடன் வழங்கப்படுவதில்லை! மாறாக நோட்டில்,கடன் வழங்கியதாக பதிவு செய்யப்படும். ஏற்கனவே வாங்கியிருந்த கடனுக்கு வரவு வைக்கப்பட்டு விடும். விவசாயிகளுக்கு பணம் வராது.
 
இந்த நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. உரிய காலத்தில் கடனை செலுத்தினால் வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி என்று ஒரு சலுகை இருக்கிறது. அதைக் கூறியே வங்கி மேலாளர் விவசாயிகளின் நாக்கில் தேன் தடவி, கண்ணில் பணத்தைகாண்பிக்காமலேயே கடன் வரவு - செலவு நோட்டு புத்தகத்தில் நடந்து கொண்டேயிருக்கும். இதிலும் கிராமப்புறங்களில் செல்வாக்கு பெற்றவர்களே கடன்களை பெற்றுவிடுவார்கள்.
 
ஏழை - சிறு விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. இந்த நடைமுறையில் திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளோ, வேளாண் பண்ணைகள், வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே கடன்கொடுத்து விட்டு, இத்தனை சதவீதம் விவசாயத்திற்கு கடன் கொடுத்து விட்டோமென்று கணக்கு காண்பிப்பதோடு கடமை முடிந்தது.
 
உண்மையிலேயே, கடன் தேவைப்படுகிற விவசாயிகளுக்கு அரசு நிதி நிறுவனங்கள் கடன் தருவதில்லை என்பது தான் அடிப்படையான பிரச்சனை. இதில் மாற்றம் கொண்டு வராமல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. தனியார் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட முடியும்.
 
ஆனால், விதிமுறைகளையெல்லாம் கால்தூசுக்கு சமமாகக் கருதி கந்து வட்டிக்காரனைப் போல் அடியாட்களை வைத்துக் கொண்டு பணத்தை வசூலிக்கிறார்கள். வட்டி, வட்டிக்கு மேல் வட்டி, மீட்டர் வட்டிஎன்று கடன் வலையிலிருந்து மீளவேமுடியாத வகையில் சிக்க வைக்கப்படுகின்றனர். ஜப்தி, ஏலம், பறிமுதல் என்று நிதிநிறுவனங்கள் கொடூரமான முறையில் நடந்து கொள்கின்றன.
 
கட்டுரையாளர்: பெ.சண்முகம் - மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நன்றி - தீக்கதிர்