1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (18:36 IST)

‘மோடி’த்துவ முகமூடி

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், நரேந்திர மோடி எனும் தனி நபரை முன்னிறுத்துவது ஏன்?

Modi

பாரதீய ஜனதாவின், மதவாதக் கொள்கைகள், மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள் உள்ளிட்ட அக்கட்சியின் மதவெறி ஆதரவு முகத்தை மறைத்துக் கொள்வதே இதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சி.
 
மோடியின் குஜராத், இந்தியாவிலேயே வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக உயர்ந்து நிற்கிறது என்ற பொய் பிரச்சாரம், இப்போது புள்ளி விவரங்களுடன் மறுக்கப்பட்டு வருகிறது. மோடி, குஜராத்தில் பெரும் தொழில் நிறுவனங்களை முதலீடு போடச் செய்து சலுகைகளை வாரி வழங்குகிறார். இதனால் பயன் பெறுவது ஏழை, நடுத்தர, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்ல; தொழிலதிபர்களும் மேல்தட்டுப் பிரிவினரும்தான். பெரும் தொழில் நிறுவனங்கள் ஒரு மாநிலத்தில் முதலீடு செய்ய வரும்போது, எந்தத் தொழில் என்பதை மட்டுமல்ல, எந்த இடத்தில் தொடங்குவது என்பதையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். “உங்கள் மாநிலத்தில் நான் முதலீடு செய்ய நீ என்ன தருவாய்?” என்று தொழிலதிபர்கள் கேட்க, பதிலுக்கு, “திருப்பி நீ எனக்கு என்ன தருவாய்?” என்று  மாநில முதல்வர்கள் கேட்க, அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு ஒரு புதிய உறவை உருவாக்கிக் கொள்கிறார்கள். இரண்டு பிரிவினரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டும், சொத்துகளை செல்வங்களை குவித்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்தியாவில் நடக்கும் அரசியல். இத்தகைய தொழிலதிபர்களால் தங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நபர் மோடிதான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
எப்படி வந்தது இந்த நம்பிக்கை?
 
குஜராத்தில் மோடி செயல்பூர்வமாக நிரூபித்துக் காட்டியதால் உருவான நம்பிக்கை. இந்தியாவில் முதல் வரிசையில் நிற்கக்கூடிய 100 முதலாளிகளில் 74 பேர் அடுத்த பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். (‘எக்னாமிக் டைம்ஸ்’-செப்.6, 2013)
 
10 ஆண்டுகாலமாக இதேபோல் பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியது காங்கிரசின் மன்மோகன் ஆட்சி. அதனால் ஊழல் சகதியில் சிக்கி அம்பலப்பட்டு, மக்கள் வெறுப்புக்கு உள்ளாகிவிட்டது. எனவே மன்மோகனை வைத்து வண்டியை ஓட்ட முடியாது என்ற நிலையில் மோடி என்ற புதுமுகத்தை இவர்கள் களத்தில் இறக்கியிருக்கிறார்கள்.
 
மோடி ஆட்சி முறைகேடாக தொழிலதிபர்களுக்கு வாரி வழங்கிய சலுகைகளை மத்திய கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையே அம்பலப்படுத்தியிருக்கிறது. 2011-2012 ஆம் ஆண்டில் மட்டும் சந்தேகப்படக்கூடிய அளவில் ரூ.1275 கோடி சலுகைகளை வாரி வீசியிருக்கிறார் மோடி. மோடியினால் பயனடைந்தவர்கள் என்று அந்த அறிக்கை வெளியிட்ட பட்டியலில் அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. குஜராத் சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதம் வந்தபோது, “அறிக்கையில் ஊழல் என்று சொல்லவில்லை; முறைகேடு என்றுதான் கூறப்பட்டுள்ளது” என்றார், குஜராத் நிதியமைச்சர். அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ குழுமங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டதையும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது தணிக்கை அதிகாரியின் அறிக்கை. விவசாய நிலங்கள், கடற்கரைப் பகுதிகள், மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறையையும் மாநில அரசின் அவசர கால அதிகாரத்தையும் பயன்படுத்தி கைப்பற்றப்பட்டுள்ளன.
 
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

குஜராத்  மாநிலத்திலேயே அதிக விளைச்சலைத் தரக்கூடிய  கோதுமைக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பகுதி தொலேரா. வளம் கொழிக்கும் இந்த விவசாய பூமியில் 920 சதுர கிலோ மீட்டர் விவசாய நிலத்தைக் கைப்பற்றி, விவசாயத்தை அழித்துவிட்டு, ‘சிறப்பு முதலீட்டு மண்டலமாக்கிட’ பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 ஏக்கர் நிலத்தில் ஒரு விவசாயி, 15,000 கிலோ கோதுமையை அறுவடை செய்து, ஆண்டுக்கு 6 லட்சம் ஈட்டக்கூடிய இந்தப் பகுதியின் விவசாயத்தை முழுதுமாக அழித்து, தொழில் நிறுவனங்களுக்கு “தாரை” வார்ப்பதை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். போராடும் விவசாயிகளை காவல்துறையை வைத்து அடக்குகிறது குஜராத் ஆட்சி. (செய்தி : ‘பிரன்ட் லைன்’, ஏப்.4, 2014)
 
வளர்ச்சி வளர்ச்சி என்று டமாரம் அடிக்கப்படும், மோடியின் குஜராத்தில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்நிலையோ படு மோசம்! உதாரணத்துக்கு சில: -
 
• அரசு பொது விநியோக அமைப்புகள் (ரேஷன் கடைகள்) மிக மோசமாக செயல்படும் மாநிலங்களில் ஒன்று குஜராத். ரேஷன் கடைகள் வழியாக அத்தியாவசியப் பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் இந்தியாவின் கடைசி மாநிலம் குஜராத்.
 
• “காந்தி கிராம வேலை வாய்ப்புத் திட்டம்” மிக மிக மோசமாக அமுலாகும் மாநிலம் குஜராத். 2009-2010இல் 60 நாள் வேலைத் திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் 19 சதவீதம்தான். இது தேசிய சராசரி அளவைவிடக் குறைவு.
 
• தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் எடுத்த புள்ளி விவரப்படி, குஜராத் நகர்புறம், கிராமங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் ஊதியத்தில் தேசிய சராசரியைவிட குஜராத் பின் தங்கியே நிற்கிறது. கிராமப்புறங்களில் வேலைக்காக கிடைக்கும் ஊதியம், அகில இந்திய அளவில் சராசரி ரூ.144 என்றால், குஜராத்தில் ரூ.112 தான். நகர்ப்புறங்களில் அகில இந்திய  சராசரி ரூ.231 என்று இருக்கும்போது, குஜராத்தில் ரூ.177 மட்டும்தான்.
 
• மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அறிக்கை அண்மையில் புதுடில்லியில் வெளியிடப்பட்டது. இதில் மனித வள மேம்பாட்டில் குஜராத் 9 ஆவது இடத்தில் நிற்கிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் குஜராத்தைவிட முன்னணியில் உள்ளன.
 
• 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குஜராத் சமூக பொருளாதார நிலை பற்றி கீழ்க்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது:
 
2001 இல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 70 சதவீதம். 2012இல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் 5 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 100 பேருக்கும் 23 பேர் வறுமையில் வாடுகிறார்கள். ஒவ்வொரு 1000 ஆணுக்கும் 918 பெண் என்ற நிலை. இதை மாற்றியமைக்க எந்த திட்டமும் இல்லை.
 
• ஆண்-பெண் பாலின எண்ணிக்கை ஏற்றத் தாழ்வில் குஜராத், 28 மாநிலங்களில் 24 ஆவது இடத்தில் இருக்கிறது. 58 சதவீத குழந்தைகளுக்கு இன்னும் அரசின் தடுப்பூசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும் 45 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதில் தமிழகம், மகாராஷ்டிரம், கேரளாவைவிட குஜராத் பின்தங்கி 21 ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு 1000 குழந்தைகளுக்கு 60 ஆக உள்ளது. ஒவ்வொரு 1000 பிரசவத்துக்கும் இறக்கும் தாய்மார்கள் 148. இதிலும் தமிழ்நாடு, கேரளாவைவிட பின்தங்கி நிற்கிறது குஜராத்.
 
• எழுதப் படிக்கத் தெரிந்த குழந்தைகள் விகிதம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிட மிகவும் பின்தங்கியிருக்கிறது குஜராத் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். ஆண்களைவிட பெண்கள் 20 சதவீதம் கல்வி அறிவு இல்லாதவர்களாக பின் தங்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கும் உயர்சாதியினருக்கும் எழுத்தறிவு பெறுவதில் உள்ள இடைவெளி குஜராத்தில் மிக மிக அதிகம். பிற மாநிலங்களைவிட குஜராத் இந்த கல்விக்கான சமூக ஏற்றத் தாழ்வில் முன்னணியில் உள்ளது. ‘சூத்திரர்’ களுக்கு கல்வியைத் தரக்கூடாது என்ற ‘மனுசாஸ்திர’ சிந்தனையில் ஆட்சி நடப்பதுதான் இதற்கு காரணம். தமிழ்நாட்டில் பாஜக நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவர்கூட பெண் இல்லை என்பதையும் சிந்திக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கி ‘ராக்கெட்’ வேகத்தில் முன்னேறுவதாக கூறப்படும் குஜராத்தில் ஏன் இந்த பின்னடைவு? ‘வளர்ச்சி’யின் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதானே?
 
• பல்வேறு மொழி, இனம், பண்பாடுகளைக் கொண்ட மக்களைக் கொண்டது இந்திய உபகண்டம். இந்த நாட்டின் பிரதமராக வரக்கூடியவருக்கான முதல் தகுதி, இந்த மாறுபட்ட இனம், மொழி, பண்பாட்டு மக்களை அங்கீகரித்து, மதிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். சர்வாதிகாரி ஹிட்லர்கூட தனது தேசத்தில் வளர்ச்சித் திட்டங்களைத்தான் அமுல்படுத்தினார். ஆனால், ஆரிய இனவெறி பிடித்து யூதர்களை அழித்தொழித்து வரலாற்றில் களங்கமாகிப் போனார். வளர்ச்சியைக் கொண்டு வந்தவர் என்று ஹிட்லரை ஆதரிக்க முடியுமா?
 
மோடி - இப்படி ஒரு பாசிசப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். “நாட்டுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது ஆர்.எஸ்.எஸ்.” - என்று மோடி ‘ஈ.டி.வி.’ என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் (2.4.2014) கூறியுள்ளார்.

அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்ற பல பாஜக மூத்த தலைவர்களின் எதிர்ப்புகளையும் மீறி, மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்.தான் களமிறக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் மோடி. அதனால்தான், குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களை கொடூரமாக அழித்தொழித்த இனப்படுகொலைக்கு துணை நின்றார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவங்களை நூலாக எழுதினார் ‘கோல்வாக்கர்’. நூலின் பெயர் ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ தமிழில் ‘சிந்தனைக் கொத்து’ என்று வெளியிட்டிருக்கிறார்கள். மக்களிடம் அதை விளம்பரப்படுத்தாமல் தங்களுக்கான ரகசிய திட்டமாக அந்தக் கொள்கைகளை ஏற்று அமுல்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ்.சின் இரகசிய இலக்கு!
 
கோல்வாக்கர் நூல் என்ன கூறுகிறது:-
 
“பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை ஆர்.எஸ்.எஸ். ஏற்கிறது. அப்படி கடவுள் படைத்தது உண்மைதான் என்கிறது, சமஸ்கிருதம்தான். இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும்; ஜாதியமைப்பு காப்பாற்றப்பட வேண்டும்; அதுதான் சமூக ஒற்றுமையைக் காப்பாற்றும்; ‘இந்தியா’ என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது; ‘பாரதம்’ என்றே கூறவேண்டும்; ‘இந்தியா’ என்ற சொல் கிறிஸ்தவர், முஸ்லீம்கள், பார்சிகள் போன்ற பிற மதத்தவரையும் சேர்த்து குறிக்கிறது; அதை ஏற்க முடியாது. ‘பாரதீயம்’, ‘பாரதம்’ என்பதே இந்துக்களை மட்டுமே குறிப்பதாகும். (இந்திய ஜனதா கட்சி என்று பெயரிடாமல், பாரதீய ஜனதா கட்சி என்று பெயர் சூட்டிக் கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம்) பாகிஸ்தான் பிரிவினையை ஏற்க முடியாது; காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 370 ஆவது சிறப்புரிமைப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். இந்துக்களுக்கான மத சட்டத்தையே ஏனைய மதத்தினருக்கும் பொதுவாக்கும் பொது சிவில் சட்டம் வரவேண்டும். இந்தியா என்பது இந்துக்களின் நாடு. இந்துக்கள் கலாச்சாரமே இந்திய மக்களின் கலாச்சாரம்”  இவையே ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படை இலட்சியங்கள். அதற்கு உயிரூட்டவே மோடியை பிரதமராக்க திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.! மறந்து விடாதீர்கள்!
 
பரிசோதனைக் கூடங்கள்
 
குஜராத் மட்டுமல்ல, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களும் இதற்கான பரிசோதனைக் கூடங்களாகவே செயல்படுகின்றன. இதற்காகவே ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகளும், பாஜக பிரதிநிதிகளும் இணைந்து நடத்தும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த சந்திப்புக்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சமன் வயா பைதாக்’; தமிழில் ‘இணைந்து நிற்போம்’ என்று அர்த்தம். பாஜக ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இந்தக் கூட்டங்களில் முன் வைக்கிறது. 2011 ஆகஸ்டில் உஜ்ஜயின் நகரில் இந்த சந்திப்பு நடந்தபோது, ஒரு முடிவு எடுக்கப்பட்டது. “பாஜகவின் தேசிய தலைவர்கள் ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா அசாரே, யோகா குரு ராம் தேவ் ஆகியோருடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்திட வேண்டும். மக்கள் கவனம் - ஊழல் எதிர்ப்புப் பக்கம் திரும்பும்போது, மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை சட்டங்களாக்கிட வேண்டும்” என்பதே அந்த திட்டம் (‘பிரன்ட் லைன்’ பிப்.26, 2012)
 
பாஜக ஆளும் மாநிலங்களில் அதுதான் நடந்து  கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். அவர் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பசுவதை தடுப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். இதன்படி, அடிமாடாகிவிட்ட எதற்கும் பயன்படாத ‘பசு’ மாட்டை வெட்டினால், 7 ஆண்டு சிறை. அதுமட்டுமல்ல, மாட்டுக் கறியை சாப்பிட்டாலே குற்றம். ஒவ்வொரு வீட்டின் சமையலறை, ஓட்டல்களில் நுழைந்து, காவல்துறை சோதனையிடலாம்; கைது செய்யலாம். ‘தடா’, ‘பொடா’ சட்டம்போல் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும். மாட்டுக் கறியை சாப்பிடுவோரையும் குற்றவாளியாக்கும் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. 2011 டிசம்பர் 22இல் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
 
200 ஏக்கர் நிலப் பரப்பில் அரசு செலவிலேயே பசுவை பாதுகாக்கும் ‘கோசாலா’ அமைக்கப்பட்டுள்ளதோடு, ‘பசு பாதுகாப்பு வாரியம்’ ஒன்றையும் மாநில அரசு அமைத்துள்ளது. மாநிலம் முழுதும் பசு காப்பு மய்யங்களுக்கு பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரத்தில் எருதுகளை வெட்ட அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே ‘எருது கறி’ ஏற்றுமதியில் முதலிடம் ம.பி.க்குத்தான். பசுவை வெட்டினால் மட்டும் சிறை. ஏன்? ‘பசு’ புனிதம் - அது ‘பிராமண’னுக்கு சமம்; எருது என்றால் இழிவு - அது ‘சூத்திர’னுக்கு சமம்!
 
ம.பி.யில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர அரசு அனுமதித்துள்ளது. ம.பி. பள்ளிகளில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடம். ‘சூரிய நமஸ்காரம்’ மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட வரும் குழந்தைகள் உணவுக்கு முன் ‘போஜன் மந்திரா’ எனும் சமஸ்கிருத மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பே ஏராளமாக கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. அதற்கு அரசு நிதி வழங்குகிறது.
 
உத்தரகான்ட் மாநிலத்தில்...
 
பாஜக ஆட்சி நடத்தும் உத்தரகாண்டிலும் பசு வழிபாடு, சமஸ்கிருதப் பாடம், மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘கோ சாதனா’ என்ற பெயரில் பசு பாதுகாப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு, சிறந்த மய்யங்களுக்கு அரசு விருது வழங்குகிறது.
 
மற்றொரு முக்கிய செய்தி:

பசு மாட்டு மூத்திரத்தை ஆராய்ச்சி செய்யும் சோதனைச் சாலைகளை உத்தரகாண்ட் மாநில அரசு நடத்துகிறது. டோராடூன் மாவட்டம், கால்கி பகுதியில் ‘பசு மூத்திரத்தை’ பதப்படுத்தும் மய்யம் ஒன்றையும் அரசு நடத்துகிறது. ‘யோகா குரு’ பாபா ராம்தேவ் மாதந்தோறும் தனது மருந்து நிறுவனத்துக்கு இங்கிருந்து ‘பசு மூத்திரத்தை’ லிட்டர் லிட்டராக வாங்குகிறார். ‘ரிஷி கேஷத்தில்’, ‘பசு மாட்டுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு’ நிறுவனம் ஒன்றை உத்தரகாண்ட் ஆட்சி நிறுவி, அதற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
 
அதுமட்டுமல்ல; ‘உத்தரகாண்ட்’ மாநில அரசு சமஸ்கிருதத்துக்கு தனி பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது. மாநில அரசின் இரண்டாவது ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆணைகள், அறிவிப்புகள் சமஸ்கிருதத்திலேயே வெளியிடப்படுகின்றன. திட்டங்களுக்கான பெயர்களும் சமஸ்கிருத மொழியில்தான் அறிவிக்கப்படுகின்றன.
 
குஜராத்தில்...

இதே வழியில்தான் குஜராத்திலும் மோடி செயல்படுகிறார்.
 
குஜராத் கலவரப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மதப் பகைமையை நீக்கி மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த மோடி விரும்பவில்லை. அதற்கான திட்டங்களையும் தீட்டவில்லை. மாறாக ‘குடியிருப்பு பாதுகாப்புச் சட்டத்தில்’ ஒரு திருத்தம் கொண்டு வந்துள்ளார். இதன்படி ஒரு ‘தலித்’ தனது வீட்டை மற்றொரு ‘தலித்’துக்கு மட்டுமே விற்க முடியும். ‘இந்து’ மற்றொரு ‘இந்து’வுக்கே விற்க முடியும். ஒரு ‘முஸ்லீம்’ மற்றொரு ‘முஸ்லீமு’க்கே விற்க முடியும். மீறி விற்றால் அரசு தலையிட்டு, விற்பனையை நிறுத்தலாம். இந்த சட்டத்தினால் முஸ்லீம் குடியிருப்பு, தலித் குடியிருப்பு, ‘இந்து’ குடியிருப்பு - அதிலும் பார்ப்பனர், உயர்சாதிக் குடியிருப்பு என்று தனித் தனிக் குடியிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன. அகமதாபாத் போன்ற நகரங்களிலேயே படித்த அரசு உயர் பதவிகளில் உள்ள ‘தலித்’ மக்கள் அவர்களுக்கான தனிப்பகுதியில் உருவாக்கப்பட்ட தனிக் குடியிருப்புகளிலேதான் வாழ்கிறார்கள். அகமதாபாத்திலிருந்து வெகுதூரத்திலுள்ள புறநகர்ப் பகுதியான ‘சந்தகேடா’ பகுதியில் படித்த முன்னேறி வரும் நடுத்தர ‘தலித்’ பிரிவினரும், மற்றொரு புறநகர்ப் பகுதியான ‘ஜீகாபுரா’ பகுதியில் முஸ்லீம்களும் ஒதுக்கி விடப்பட்டுவிட்டனர். இப்படி சமூகங்கள் கலந்து ஒன்றாக குடியிருக்கும் வாய்ப்பு தடைபடுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியில், ஒரு முஸ்லீம் வீடுகூட கிடையாது என்கிறார். அங்கே தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் அச்யுத் யஜ்னிக்.
அகமதாபாத் நகரில் ஓடும் சபர்மதி ஆற்றின் ஒரு பக்கம் - சுகாதாரமற்ற எந்த வசதியும் செய்து தரப்படாத முஸ்லீம்கள் வாழும் பகுதி. ஆற்றின் மறுபுறம் - நவீன கட்டிடங்கள், ஓட்டல்கள், பல்கலைக்கழகம், அங்காடிகள் நிறைந்த இந்து, பார்ப்பன, பட்டேல் உயர்சாதி மக்கள் வாழும் பகுதி என நகரம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு மைனாரிட்டி மக்களுக்காக வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை மோடி ஏற்க மறுத்துவிட்டார். தலித் சமூகத்தினரைவிட முஸ்லீம் சமூகம் கல்வியில் பின்தங்கியிருப்பதை ராஜேந்திர சச்சார் குழு சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இத்தனைக்கும் குஜராத்தில் பள்ளி இறுதிப் படிப்பு வரை செல்லக் கூடிய முஸ்லீம் மாணவர்கள் 26 சதவீதம் மட்டுமே. 79 சதவீத முஸ்லீம்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள்.  மாநிலத்தில் வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் 12 சதவீதம் தான். வங்கிக் கடன் பெற்றோர் 2.6 சதவீதம். மோடி இதுவரை எந்த ஒரு முஸ்லீமையும், பாஜக வேட்பாளராக நிறுத்தியதே இல்லை.
 
தலித் மக்கள் நிலை...
 
முஸ்லீம்கள் நிலை இதுவென்றால் தலித் மக்கள் நிலை என்ன?
 
• உயர்ஜாதிக்காரர்கள் நடத்தும் கடைகளில் தலித் மக்கள் காசு கொடுத்துப் பொருள் வாங்க முடியாது. அவர்கள் நடத்தும் அரவை மில்களில் கோதுமை அரைக்க முடியாது.
 
• 90 சதவீதம் கிராமங்களில் தீண்டாமை நீடிக்கிறது. இது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல். தேனீர் கடைகளில் தலித் மக்களுக்கான குவளைக்கு ‘இராம பாத்திரம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
 
• மதிய உணவில் பிற ஜாதி குழந்தைகளுடன் தலித் குழந்தைகள் சேர்ந்து சாப்பிட முடியாது.
 
• மனித மலத்தை மனிதர்களே எடுக்கும் அவலம் - இழிவு இன்னும் தொடருகிறது. மோடி இதை நியாயப்படுத்துகிறார். “இந்தத் தூய்மைப் பணியை தெய்வீகப் பணியாகக் கருதி பல நூற்றாண்டுகளாக அவர்களே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்பியே தொடருகிறார்கள்” - என்று இந்த ‘இழி வேலைக்கு’ தெய்வீக முலாம் பூசி தன்னுடைய ‘கர்ம யோக்’ நூலில் எழுதினார், மோடி. தமிழகத்தில் மோடியின் இந்த நூல் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தப் பிரச்சனை மாநிலங்களவையில் ‘பிரவின் ராஷ்டிராபதி’ என்ற உறுப்பினரால் எழுப்பப்பட்டது. எதிர்ப்பின் காரணமாக, குஜராத் செய்தித் துறை, அந்த நூலை திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால், மோடி தனது கூற்றை மறுக்க தயாராக இல்லை. பாதாள சாக்கடையில் இறங்கி மூச்சுத் திணறி இதுவரை 641 தலித் தோழர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கே வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக இவர்கள் பெருமை பேசும் குஜராத் நிலை இதுதான்!
 
இரத்த ஆறு ஓடிய கலவரம்
 
• 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கொடூரமாக 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆயுதங்களுடன் வெறியாட்டம் போட்ட கும்பலை தடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு மோடி உத்தரவிட்டார் என்று மாநில காவல்துறை உயரதிகாரியே குற்றம்சாட்டுகிறார். விசாரணைக் குழுவின் முன் இந்த உண்மையை அம்பலப்படுத்தினார், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹரேன் பாண்டியா எனும் அமைச்சர். அதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் அவர் கொலை செய்யப்பட்டார். ஹரேன் பாண்டியாவின் தந்தை, தனது மகன் கொலைக்குக் காரணம் மோடிதான் என்று குற்றம்சாட்டினார். குற்றத்தை மறைக்க இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி என்றார் மோடி. சதிக்கு உடந்தை என்று 17 அப்பாவி முஸ்லீம்களை கைது செய்தார். அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டது.  உண்மையில் நடந்தது என்ன? ஹரேன் பாண்டியாவின் கொலையில் சோரப்தீன் என்ற ரவுடியை கூலிப்படையாக பயன்படுத்தினார்கள். பிறகு அவரையும் கொலை செய்தார்கள். அதை மறைக்க அவரது மனைவி கவுசர் பீ-யையும் கொலை செய்து எரித்து விட்டார்கள். இந்த உண்மைகளைத் தெரிந்தவர் இன்னொரு ரவுடி துளசி பிராஜபதி. அவரையும் கொன்றார்கள். இத்தனை கொலைகளையும் செய்தவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகள்.
 
• நரோ பாட்டியா என்ற இடத்தில் 69 இஸ்லாமியர்களை படுகொலை செய்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் - மோடியின் அமைச்சரவையில் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயாகோத்னானி என்ற பெண்.
 
• மோடியை கொலை செய்ய பாகிஸ்தான் சதி என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கியது மோடியின் காவல்துறை. இதற்காக இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்ளிட்டோர் ‘போலி என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போலி என்கவுண்டர் என்பது உறுதியானதால், மோடி ஆட்சியின் 32 காவல்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை தலைமை அதிகாரி வன்சாரா, சிறையிலிருந்து மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘உங்கள் அரசாங்கம் கூறித் தானே நாங்கள் கொலை செய்தோம். தண்டனை எங்களுக்கு மட்டும் தானா? அரசாங்கத்துக்கு இல்லையா?” என்று கேட்டார். இந்தியாவை காக்கவே ‘அவதாரம்’ எடுத்து வந்ததாகக் கூறப்படும் மோடியிடமிருந்து இதற்கு பதிலைக் காணோம்.
 
குஜராத் கலவரத்தில் மோடிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சீடர்கள் பேசி வருகிறார்கள். தான் பயணம் செய்யும் காரில் ஒரு நாய்க்குட்டி சிக்கினால் ஏற்படும் வேதனைதான் தனக்கு ஏற்பட்டது என்கிறார் மோடி. 2000 இஸ்லாமியர் படுகொலைகளை நாய்க்குட்டியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அவ்வளவு ‘பரந்த உள்ளம்’ மோடிக்கு இருக்கிறது! இது மத வெறித் திமிர் தானே? பாஜக தலைவர் ராஜ்நாத்கோ இந்தப் படுகொலைக்கு மோடி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்கிறார். மோடி அதற்காக வருத்தமோ மன்னிப்போ கேட்கத் தயாராக இல்லை.

அது மட்டுமல்ல; கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவம் நடந்தது 2002, பிப்.27. இந்த எரிப்புக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால்,  எரிப்புச் சம்பவம் நடந்த அடுத்த நாளே மோடி மாநில அரசு நடத்தும் தொலைக்காட்சியில் பேசினார். குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப் படுவார்கள் என்று ஒரு முதலமைச்சர் பொறுப்போடு கூறியிருந்தால் அது நியாயமானது. ஆனால் முதல்வர் மோடி என்ன பேசினார்?
 
“இது  போன்ற சம்பவங்களை குஜராத் சகித்துக் கொண்டிருக்காது என்று குஜராத் மக்களுக்கு உறுதி கூறுகிறேன். குற்றவாளிகள் - அவர்கள் செய்த ‘பாவ’த்துக்கு முழுமையான தண்டனை பெறுவார்கள். அத்துடன் முடித்துவிட மாட்டோம். இதுபோன்ற கொடும் குற்றங்களை இனி எவரும், கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலையை உருவாக்குவோம், அதற்கு முன்னுதாரணமாக நிற்போம்” - என்றார் மோடி.
 
சட்டப்படியான நடவடிக்கைகளையும் மீறி, “குற்றங்களுக்கு” பாடம் கற்பிப்போம். கனவிலும் இனி எவரும் இதை நினைத்துப் பார்க்கக் கூடாது என்று ஒரு முதல்வரின் பேச்சு எதைக் காட்டுகிறது? அதே நாளில் குஜராத் சட்டமன்றத்திலும் இப்படியே பேசினார்.
 
“இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்டிக்கும் நடவடிக்கைகள் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது”
என்று பேசினார் மோடி! கலவரத்தை இனப்படுகொலையை ஒரு முதல்வரே தூண்டிவிட்டார் என்பதற்கு, இந்தப் பேச்சே போதுமான ஆதாரம்!

அடுக்கடுக்கான ஊழல்...
 
ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக ஊழல் ஆட்சி நடத்தியதுதான் பாஜக ஆட்சி! வாஜ்பாய் ஆட்சியில்தான் அரசுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்காக தனி அமைச்சரவை ஏற்படுத்தி, அருண்ஷோரி என்ற அமைச்சராக்கினார்கள். 30க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களை தனியாருக்கு பேரம் பேசி விற்று, பெரு முதலாளிகளையும் தங்களையும் கொழுக்க வைத்துக்கொண்ட வரலாற்றை மறந்துவிட முடியாது. மக்கள் தங்கள் சேமிப்புத் தொகையை பத்திரமாக திரும்பிக் கிடக்கும் என்று நம்பி அரசு நிதிநிறுவனமான ‘யு.டி.அய்.’யில் முதலீடு செய்தனர். அப்பணத்தை பாஜக ஆதரவு நிறுவனங்களில் கொண்டுபோய் முதலீடு செய்து, அந்நிறுவனங்கள் ‘திவாலாகி’ இழுத்து மூடிய நிலையில் அரசை நம்பி சேமிப்பை முதலீடு செய்த மக்களின் நெற்றியில் பட்டை நாமம் போட்டது, வாஜ்பாய் பாஜக ஆட்சி! முதலீடு செய்த ‘ரிலையன்சுக்கு’ மட்டும் முன் கூட்டியே ‘திவாலாகும்’ தகவலை தெரிவிக்க, அந்த நிறுவனம் மட்டும் பாதுகாப்பாக முதலீட்டுத் தொகையை திருப்பி வாங்கிக் கொண்டது. மொரிஷியஸ் தீவில், பதிவு செய்து வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் வரி கிடையாது என்ற ஒப்பந்தத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்தியாவில் பங்கு சந்தையில் பெரும் முதலீடு செய்து, இந்தியாவுக்கு வரவேண்டிய 1000 கோடி வரியை ஏய்த்த கம்பெனிகள்மீது, வருமான வரித் துறை நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுக்க முயற்சித்தது; குறுக்கிட்ட பாஜக ஆட்சி, மோசடிக் கம்பெனிகள் கட்ட  வேண்டிய வரியை தள்ளுபடி செய்து அறிவித்தது. கார்கில் போர் வீரர்களுக்கு சவப் பெட்டிகள் வாங்கியதில் ஊழல்; இராணுவத் தளவாடங்கள்  வாங்குவதில் ஊழல் (பாஜக தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் லஞ்சம் வாங்கியதை வீடியோ படமாக்கி, ‘டெகல்கா’ பத்திரிகை அம்பலப்படுத்தியது). ‘ஹவாலா’ ஊழலில் சிக்கி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் அத்வானி; தொலைபேசி ஊழலில் சிக்கியவர் பிரமோத் மகாஜன்; அரசுத் துறை நிறுவனமான மும்பை சென்டார் ஓட்டலை, பாஜக ஆதரவாளருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று, அடுத்த சில மாதங்களில் மறு விற்பனை மூலம் 250 கோடி லாபம் கிடைக்கச் செய்த ஊழல், ‘பெட்ரோல் பங்க்’ ஒதுக்கீட்டில் கட்சிக்காரர்களுக்கு குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்து முறைகேடு... என்று ஊழல் பட்டியல் நீளுகிறது.
 
இப்போது என்ன கதை? ஒரே ஒரு உதாரணம். கருநாடகாவில் ரெட்டி சகோதரர்களுடன் சேர்ந்து கனிம வளங்களை கொள்ளையடித்த பாஜக முதல்வர் எடியூரப்பாவை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார்கள். இப்போது மீண்டும் பாஜக அவரை அரவணைத்துக் கொண்டுவிட்டது. முதலமைச்சர் பதவியிலிருந்த போதே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, பதவியிலிருந்த காலத்திலேயே நேரடியாக சிறைக்குப்போன ஒரே முதல்வர் எடியூரப்பா. அவர் இருந்த கட்சி பாஜக அதேபோல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்ரீராமுலுவை மீண்டும் பாஜகவில் ‘தூய்மைச் சடங்கு’ நடத்தி சேர்த்துக் கொண்டு, கருநாடகத்தில் பாஜக வேட்பாளராக களமிறக்கிவிட்டார்கள். குஜராத் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் பாபு பொக்கிரியா ரூ.54 கோடி சுரங்க ஊழல் மோசடியில் சிக்கியவர். 47 கிரிமினல் வழக்குகள் உள்ள இவர், 2006இல் நீதிமன்றத் தண்டனை பெற்றவர் - மேல் முறையீடு செய்து கொண்டு இப்போதும் மோடி அமைச்சரவையில் தொடருகிறார்.
 
போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சி.பி.அய்.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் வெளி வந்துள்ளவர் அமீத் ஷா. மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அவர் இருந்தபோது தான், இத்தனைக் கூத்தும் நடந்தது. அவர்தான் இப்போது உ.பி.யில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர். உ.பி.க்கு அவர் வந்தவுடன், முசாபர் நகர் பகுதியில் ‘முஸ்லிம்’களுக்கு எதிரான கலவரத்தைத் துண்டிவிட்டார். இப்போதும் பாதிக்கப்பட்ட 3000 இஸ்லாமியர்கள் அகதிகள் முகாம்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முசாபர் நகரில் நம்மை (இந்துக்களை) அவமதித்தவர்களை (இஸ்லாமியர்களை) தேர்தலில் பழிவாங்க வேண்டும் என்று மதவெறியைத் தூண்டிப் பேசியதால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது. மோடியின் மனசாட்சியாக செயல்படுபவர்தான் அமீத் ஷா என்பதை மறந்து விடக் கூடாது.
 
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதியை இவர்கள் இடித்துத் தள்ளியது. ஏதோ, உணர்ச்சி வயப்பட்ட வன்முறை அல்ல. ஒரு மாத காலத்துக்கு முன்பே திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ்., பாஜக, சிவசேனா, விசுவ இந்து பரிஷத் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்துத்தான் இடித்தார்கள் என்பதை ‘கோப்ரா போஸ்ட்’ என்ற இணைய இதழ் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னணித் தலைவர்களை ரகசியமாக பேட்டி கண்டு, அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலத்துடனேயே அம்பலமாகிவிட்டது. மறுக்க முடியாமல் திணறும் பாஜக, இந்தப் பதிவுகளை ஒளிபரப்ப தடை கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு போடுகிறது.
 
‘தேசத் தந்தை’ காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். சுக்கும் தொடர்பில்லை என்று பாஜக சாதிக்கிறது. ஆனால், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விடுதலையான நாதுராம் விநாயக் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, “பாஜக அப்படி கூறுவது கோழைத்தனம். நாங்கள்  ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்” என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்ததை மறைக்கத் துடிக்கிறார்கள் இந்தப் பொய்யர்கள்.

ஒடிசாவில் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வந்த ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ், அவரது அன்பு மகன்கள் பிலிப்ஸ் (வயது 9), திமேத்தி (வயது 7) ஆகியோரை உயிருடன் நெருப்பில் போட்டு எரித்தவர்கள், கிறிஸ்துவ மத ‘அருட் சகோதரிகளை’ பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கியவர்கள். உலகப் புகழ் பெற்ற ஓவியர் உசேனியின் ஓவிய கண்காட்சிகளிலும் பெண்கள் மீது மதம் சுமத்திய அடிமைத்தனத்தை சித்தரித்த திரைப்படமான ‘தண்ணீர்’, திரைப்படம் ஓடிய அரங்குகளிலும் தாக்குதல் நடத்தியவர்களும், இந்து மதத்தை ஆய்வு நோக்கில் விமர்சிக்கும் நூல்களை தடை செய்ய மிரட்டுகிறவர்களும் இவர்கள்தான். அதே நேரத்தில் ‘இந்து’ மதத்திலேயே உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சாஸ்திரங்களை’ புனிதப்படுத்திப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள் தான்! இவர்கள் தான் வளர்ச்சியின் நாயகர்களா? இவர்கள் தான் நாட்டை வல்லரசாக்கும் தேசபக்தர்களா?
 
‘மோடி’ ரசிகர்களுக்கு..!
 
ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவிப்பார்களா? மசூதியை மீண்டும் கட்டித்தர சம்மதிப்பார்களா? சிறுபான்மை சமூகத்தினருக்கான மதச் சட்டங்களை நீக்கிவிட்டு, ஒரே பொதுச் சட்டம் என்ற பெயரில் ‘இந்து’ சட்டங்களுக்குள் கொண்டு வர மாட்டோம் என்று உறுதி தருவார்களா? “மதக் கலவரங்களில் நம்பிக்கையில்லை, மக்கள் ஒற்றுமையை மதங்களைக் கடந்து வளர்ப்போம் என்று வாக்குறுதி அளிப்பார்களா? இந்தியா - இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல, ‘இந்து ராஷ்டிரம்’ எங்கள் கொள்கையும் அல்ல” என்று பிரகடனப்படுத்துவார்களா? இந்த உறுதிகளைத் தர ஏன் முன்வரவில்லை?
வளர்ச்சி என்ற முகமூடிக்குள் மறைத்து வைக்கப்பட் டிருக்கும் இரகசியங்கள் ஏராளம்! உண்மைகளை தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் விரும்புகிறார்கள். ‘வேண்டாம்’ என்று மறைக்க விரும்புகிறது மோடி அணி! இதற்குப் பெயர்தான் ‘மோடித்துவம்’! பாஜக தேர்தல் அறிக்கை தாமதமானதன் பின்னணி இதுதான்!
 
மதக் கலவரங்கள் நடத்திய மோடியை - அமெரிக்கா உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கே ‘விசா’ மறுத்துவிட்டன. அவரை இந்தியாவின் பிரதமர் சிம்மாசனத்தில் அமர வைக்கத் துடிக்கிறார்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் - மோடி ரசிகர்கள் - ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்!