வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (14:18 IST)

கபாலியும் ஸ்வாதியும் - சாதிய டிஜிட்டல் யுத்தத்தின் பரிணாமங்களே

கபாலியும் ஸ்வாதியும் - சாதிய டிஜிட்டல் யுத்தத்தின் பரிணாமங்களே

மனித எண்ணங்கள் வால்போஸ்டர்களாகவும், துண்டு அறிக்கைகளாகவும், கடிதங்களாகவும் வெளிப்பட்ட நாட்கள் சென்றுவிட்டன. இப்பொழுது எல்லாம் மனித எண்ணங்கள் வாட்ஸப் மெசேஜ், பேஸ்புக் மீம்ஸ், குறும்படங்கள், சமூக வலைதளங்கள் தொடர்புகள், யூ ட்யூப் வீடியோ என டிஜிட்டல் வண்ணம் பூசி அனுப்பப்படுகின்றது.


 


ஆயிரம் வார்த்தைகள் எழுதி மக்களிடம் சேர்க்க முடியாத ஒரு விஷயத்தை/எண்ணங்களை ஒரு மீம்ஸ் மூலம் கொண்டு சேர்க்க முடியும். தனிப்பட்ட ஒரு மனிதனின் எண்ணங்கள், ஒரு மொத்த இனத்தின் எண்ணங்களாக டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் எடுத்து செல்லப்படுவதுதான் சாதிய டிஜிட்டல் யுத்தம். சாதிய டிஜிட்டல் யுத்தம் ஸ்வாதியாகவும் கபாலியாகயும் பரிணமித்து இருப்பது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் சாதிய டிஜிட்டல் யுத்தம் இட்டுகட்டி எடுத்துச்செல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது மிகவும் அபாயகரமானது.

நிகழ்வு -1: ஸ்வாதியும், சாதிய டிஜிட்டல் யுத்தமும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தி டிவியில் ரங்கராஜா பாண்டேவும் ஸ்வாதி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் உரையாடும் பொது "தலித் நீதிபதி" என்று இரண்டு முறை உச்சரித்த போது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து ரங்கராஜா பாண்டே ஆட்சேபம் தெரிவித்தபோது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க தயார் என்கிறார். கொலை செய்தவனையும், கொல்லப்பட்டவனையும் வழக்கின் தன்மை கொண்டே பார்க்கப்பட வேண்டும். மாறாக அவர் தம் இனம் கொண்டும், சாதி கொண்டும் பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்க்கப்படுவது இனப்பற்றாகவும் ,சாதியபற்றாகவும் பார்க்கப்படுகிறது. சாதிய தலைவர்களின் உரைகளும் இவற்றை ஊக்குவிக்கின்றன. ஸ்வாதி கொலை வழக்கில் பாஜக தலைவர் எச். ராஜாவும், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும், இந்த சாதிய டிஜிட்டல் யுத்தத்தை அடுத்தக்  கட்டத்திற்கு நகர்த்தினார்கள். சாதிய டிஜிட்டல் யுத்தத்தின் விளைவு ஸ்வாதிக்கு ஆதரவானவர்கள் ஓர் பிரிவாகவும், ராம்குமார் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், இந்த வழக்கு தொடர்பான தங்களது எண்ணங்களை ஓர் இனத்தின் பதிவுகளாக பதிவு செய்து வருகின்றன.

நிகழ்வு – 2: கபாலியும் சாதிய டிஜிட்டல் யுத்தமும்

கபாலி என்னும் திரைப்படம் ரஜினி படமாக மட்டும் முதலில் வெளியானது. பிறகு இயக்குனர் ரஞ்சித் படம் ஆனது. இன்று டிஜிட்டல் யுத்தம் காரணமாக அது தலித் படமாக பரிணாமம் பெற்று இருக்கிறது. கபாலியை எதிர்த்து விமர்சனம் செய்பவர்கள் ஒரு பிரிவாகவும் (வெறுப்புடா கடுப்புடா) ஆதரித்து விமர்சனம் செய்பர்வர்கள் (நெருப்புடா கபாலிடா) ஒரு பிரிவாகவும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றன. இயக்குனர் ரஞ்சித்தை கொண்டாடுபவர்கள் எல்லாம் தங்கள் பதிவுகளை ஓர் இனத்தின் பதிவுகளாக பதிவு செய்கின்றன. இந்த டிஜிட்டல் யுத்தத்தில் இயக்குனர் ரஞ்சித் ஒரு குட்டி திருமாவளவன் போலவே பார்க்கப்படுகிறார். ரஞ்சித் திறமையானவர் என்பதில் எங்களுக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை. அவரிடம் திறமை இருக்கும் பட்சத்தில்தான் அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு படைப்பாளியே தனது படைப்புகளையும் அதன் குணாதிசியங்களையும் அதன் வசனங்களையும் தீர்மானிக்கிறான். சன் ஆப் பாலையா தொடங்கி கருப்பு நிறம் பற்றி ராதிகா ஆப்தே பேசுவது என எல்லாமே ரஞ்சித்தின் எண்ணங்கள்தான் ஒரு இனத்தின் எண்ணங்கள் அல்ல.

இயக்குனர் ரஞ்சித் அவர்களே

ரஞ்சித்திடம் விகடன் மாணவ ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏன் தலித்கள்  எங்கு சென்றாலும் சாதியை எடுத்து செல்கிறார்கள்? என்று கேட்க ப் படுகிறது. அதற்கு ரஞ்சித்தின் பதில், நான் எங்கு சென்றாலும் என் சாதிதான் முதலில் என்னுடன் முதலில் வருகிறது. ஜீ தமிழ் நியூஸ்இல் கடந்த வாரம் பேசும் போது தேவர் மகன், சின்ன கவுண்டர் பற்றி பேசுகிறார். தனது நிறம் பற்றி பேசுகிறார்.

இயக்குனர் ரஞ்சித் அவர்களே! எங்களுக்கும் வருத்தம்தான்.வளர்ச்சி பற்றி பேசும் இந்த தேசத்தில் இறந்த மாட்டின் தோலுக்காக தலித்கள் தாக்க படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தங்களின் திறமையை உடனடியாக எப்படி அங்கீகரிக்கும் என்று நம்புகிறார்கள்? உங்கள் படைப்புகளில் உங்கள் தாக்கம் இருக்கதான் செய்யும். அது குறித்து வரும் விமர்சனங்களை நீங்கள் உங்களின் இனத்தை கொண்டே எதிர் கொள்ளாமல் உங்களின் திறமையை கொண்டு எதிர்கொள்ள வேண்டும். வரும்காலங்களில் உங்களிடம் நாங்கள் வித்தியாசமான கதைக்களங்களை எதிர்பார்க்கிறோம். ரஞ்சித் ஒரு பாலச்சந்தரை போல மஹேந்திரன் போல பரிணமிக்க வேண்டும். என்பதே எங்களின் ஆவல். உங்களை நோக்கி வரும் சாதியம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிருங்கள்.

அரசின் பொறுப்பு

சாதிய தலைவர்களை எல்லைகள் மீறி பேசவிட்டதன் விளைவுதான் இந்த சாதிய டிஜிட்டல் யுத்தங்கள். யுவராஜ் என்பவர் ராம்குமார் சட்டத்தின்  பிடியில் இருந்து தப்பிக்கலாம். என் பிடியில் இருந்து தப்பமுடியாது என்கிறார். இது போன்ற பேச்சுகளை அரசு ஏன் அனுமதிக்கிறது? ஸ்வாதி கொலை வழக்கில் கருத்து தெரிவித்த ஒய்.ஜி. மகேந்திரனிடம் அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை? அரசு சாதிய தலைவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷமம் செய்பவர்கள் மீது எல்லாம் கடும் வழக்குகள் பாய வேண்டும். ஏனெனில். கருத்து சுதந்திரம் எல்லைகள் அற்றது அல்ல.



இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை