வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By வெ. சுரேஷ்
Last Updated : வெள்ளி, 2 ஜனவரி 2015 (12:45 IST)

இந்தியா - 2014

அன்பார்ந்த வாசகர்களுக்கு வெப்துனியாவின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

2014 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.


 

 
நாடாளுமன்றத் தேர்தல் 2014
 
543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின்  16 ஆவது பொதுத் தேர்தல், ஏப்ரல் 7 ஆம்  தேதி முதல் மே 12 ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள, 543 தொகுதிகளுக்கு 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெற்றது.
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. இவற்றில் காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியால் எதிர்கட்சி அந்தஸ்த்தைக்கூடப் பெறமுடியாமல் போனது. பிற கட்சிகள் 148 இடங்களில் வெற்றி பெற்றன.
 
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றார்


 
 
மே மாதம் 26 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
 
நரேந்திர மோடியுடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அவர்களுள் 23 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 10 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 11 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
 
நரேந்திர மோடி தலைமையிலான இந்த அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பும், அருண் ஜேட்லிக்கு நிதி மற்றும் பாதுகாப்புத்துறையும் வழங்கப்பட்டது.

தெலங்கானா புதிய மாநிலம் உதயம்


 
 
ஜூன் 2 ஆம் தேதி, இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து முறையாகப் பிரிக்கப்பட்டு இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.
 
புதிய மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் பதவியேற்றார்.
 
தனி மாநிலமாக தெலங்கானாவை அறிவிக்க வேண்டும் எள்று 58 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், 10 மாவட்டங்கள், 35 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தெலங்கானா மாநிலம் அதிகாரபூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது.
 
ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் கூட்டுத் தலைநகராக ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வெற்றிகரமாக ஏவப்பட்டது மங்கள்யான் விண்கலம்


 
 
நவம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவு தளத்தில் இருந்து மங்கள்யான் விண்கலம் விண்னில் செலுத்தப்பட்டது.
 
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், தனது பணியை வெற்றிகரமாகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 19 ஆம் தேதி இரண்டு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
 
மங்கள்யான் விண்கலத்தை குறைந்த செலவில் உருவாக்கி, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி, உலக நாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வியக்கவைத்தனர்.

அசாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 83 பேர் பலி


 
 
டிசம்பர் 24 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 83 பேர் உயிரிழந்தனர்
 
போடோ தீவி­ர­வாத அமைப்­பினர், அசாமின் சோனித் பூர், கோக்­ரஜார், சிராங் ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த 5 கிரா­மங்­களில் பழங்குடியின மக்கள் மீது தாக்­கு­தல் நடத்தினர்.
 
இந்த சம்­ப­வத்­துக்கு பிர­தமர் நரேந்­திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்­த­தோடு, இறந்­த­வர்­களின் குடும்­பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படு­காயம் அடைந்­த­வர்­க­ளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்­தர­விட்­டார்.
 
இதற்­காக பிர­தமர் நிவா­ரண நிதியில் இருந்து மாநில அர­சுக்கு 86 லட்சம் ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரிவித்தது.

சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம்


 
 
ஜனவரி 17 ஆம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஒரு விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல எனறு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரிவிக்கப்பட்டது. சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷமே காரணம் என்று காவல்துறைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 
அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்


 
 
பிப்ரவரி 17 ஆம் தேதி முதல், டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
 
பிப்ரவரி 14 ஆம் தேதி முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். மேலும், டெல்லி சட்டமன்றத்தை முடக்கிவைக்கவும் அவர் அனுமதி தந்தார்.
 
பின்னர் இது குறித்த கூறிய கெஜ்ரிவால், “49 நாட்களில் ராஜினாமா செய்ததது ஒரு தவறான அரசியல் மதிப்பீடு என்றும் அந்தத் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.
 
மேலும், ராஜினாமா செய்தால் மீண்டும் மறு தேர்தல் உடனடியாக நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அது ஒரு தவறான அரசியல் கணிப்பு என்று கூறினார்.

ரோஹித் ஷர்மாவின் உலக சாதனை


 
 
நவம்பர் 13 ஆம் தேதி, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ரோஹித் ஷர்மா 151 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்தார்.
 
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த, உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
மேலும், அதே போட்டியில் 173 பந்துகளில் 33 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்களைக் குவித்து, புதிய உலக சாதனையைப் படைத்தார் ரோகித் ஷர்மா.

ஆசிய விளையாட்டு போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி பதக்கம் பெற்ற சரிதா தேவி


 

 
தென் கொரியாவின் இன்ச்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி அரையிறுதியில் தென் கொரிய வீராங்கனையிடம் தோற்றதாகக் கூறிய நடுவர்களின் தீர்ப்பை ஏற்க மறுத்தார்.
 
இதைத் தொடர்ந்து அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த பரிசளிப்பு விழாவில், தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை கையில் பெற்று அதை தென் கொரிய வீராங்கனையின் கழுத்தில் அணிவித்து கதறி அழுதார்.
 
இதனால், ஒழுங்கு நடவடிக்கையாக, அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், இந்த தடையை ரத்து செய்யக் கோரி மத்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியது. மேலும், சரிதா தேவிக்கு ஆதரவாக சச்சின் டென்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டு தடை மட்டுமே விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
பின்னர், ஆசிய விளையாட்டு போட்டியில் வாங்க மறுத்த அந்த வெண்கலப் பதக்கத்தை சரிதா தேவி டிசம்பர் 11 ஆம் தேதி பெற்றுக் கொண்டார்.

பி.கே. படத்தை தடை செய்ய இந்து அமைப்பினர் போராட்டம்


 
 
டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, பாலிவுட் நடிகர் அமீர்கான் - அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்த படம் பி.கே. இந்தப் படத்தில் இந்து மதத்தை இழிவு படுத்தும் காட்சி இருப்பதாகக் கூறி வட இந்தியாவில் இந்தப்படம் ஓடும் தியேட்டர்களை அடித்து நொறுக்கி பஜ்ரங்தள் அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
 
இந்தப் படத்திற்குத் தடைகோரி தொடங்கப்பட்ட வழக்கில், அந்தப் படத்தை தடைசெய்ய முடியாது என்றும், தடை செய்யக் கோருவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
 
இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி, டெல்லி, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், அந்தப் படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு முன்பாக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராம் ஷிண்டே காவல் துறையினரை கேட்டுக்கொண்டார்.
 
ஆனால், இது குறித்து எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் பி.கே. படக்காட்சிகள் தொடர்ந்து மகராஷ்டிராவில் ஓடும் என்றும், மேலும், இந்த படம் ஓடும் தியேட்டரில் பிரச்சனை ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.